தென்னிலங்கையைச் சேர்ந்த பெரும்பான்மை இனத்தவர்களை வடக்கில் நியமிப்பது அறியாமையில் செய்யப்பட்ட விடயமா அல்லது உள்நோக்கத்தோடு செய்யப்பட்ட விடயமா என்பது வேறு. என்னை பொறுத்தவரையில் நான் இதற்கு இடம் கொடுக்க மாட்டேன் : அவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று கடற்றொழில், நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
ஒரு லட்சம் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் தொழில் பயிற்சி பெற்ற தென்னிலங்கையைச் சேர்ந்தவர்கள் சிலரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், தொல்லியல் திணைக்களம் உட்பட வடக்கு மாகாணத்தில் உள்ள அரச நிறுவனங்களில் நியமிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இன்று காலை பிரதமரோடு கலந்துரையாடி இருந்தேன். வடக்கு மாகாணத்தில் இருக்கக்கூடிய பெரும்பான்மை மக்கள் தமிழ் பேசுகின்ற மக்கள். தொழில் வாய்ப்புகளை வழங்குகின்ற போது தமிழ் மக்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். கடந்த காலத்தில் சில தவறுகள் நடந்திருக்கின்றன. அது உடனடியாக களையப்பட வேண்டும் என்று சொல்லி இருந்தேன். இதற்கு முன்னர் அமைச்சரவையிலும் அவரோடு கலந்துரையாடி இருக்கின்றேன்.
ஒரு லட்சம் வேலை வாய்ப்பில் தென்னிலங்கையில் இருந்து நியமிக்கப்பட்டு இங்கு வருவதாக அறிந்து தான் அதனை உடனடியாக நிறுத்துமாறும், இங்கிருக்கின்றவர்களுக்கு தான் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று சொல்லியபோது அவர் அதனை ஏற்றுக் கொண்டுள்ளார். அடுத்தடுத்த கிழமைகளில் இவை நடைமுறைக்கு வரும்.
தற்போது வந்தவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள். அவர்களுக்கு இங்கு மொழிப் பிரச்சனை, தங்குமிட பிரச்சினைகள் இருக்கின்றது, இதனால் அவர்கள் உழைப்பது அவர்களின் செலவுக்கே போய்விடும்.
இது ஒரு அறியாமையில் செய்யப்பட்ட விடயமா அல்லது உள்நோக்கத்தோடு செய்யப்பட்ட விடயமா என்பது வேறு. என்னை பொறுத்தவரையில் நான் இதற்கு இடம் கொடுக்க மாட்டேன். கடந்த காலத்தில் நல்லாட்சி என்ற பெயரில் இங்கு நடந்தது போன்று நான் இங்கு நடக்க விட மாட்டேன். தொல்லியல் திணைக்களத்தில் ஏற்கனவே நியமிக்கப்பட்ட தென்னிலங்கையைச் சேர்ந்தவர்களும் திருப்பி அனுப்பபடுவார்கள்” என்றார்.
இதேநேரம் – இந்த விடயம் தொடர்பில் பலநோக்கு அபிவிருத்திச் செயலணித் திணைக்களப் பணிப்பாளரின் அறிவுறுத்தல் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு ஊடாக வழங்கப்பட்டுள்ளதே தவிர பல்கலைக்கழக நிர்வாகம் இதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிக்கவில்லை என யாழ். பல்கலைக்கழக நிர்வாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் ஒரு லட்சம் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற ஆயிரத்து 139 பேர் நியமனத்துக்குத் தகுதி பெற்றவர்கள் எனப் பட்டியலிடப்பட்டுள்ள நிலையில், பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த 7 பேர் யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தில் உள்ள வெற்றிடங்களுக்கு நியமிக்கப்படவுள்ளனர் என்றும், இன்று 30ஆம் திகதிக்குள் இவர்களுக்கான நேர்காணல் மற்றும் ஆள்சேர்ப்பு நடவடிக்கைகளை முன்னுரிமை அடிப்படையில் நடாத்தி முடிக்குமாறும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர் கடந்த 26 ஆம் திகதி வியாழக்கிழமை யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தருக்குக் கடிதம் மூலம் அறிவுறுத்தல் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
