உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிளில் கலந்து கொள்ள விரும்பும் ஆசிரியர்களுக்கான விண்ணப்ப முடிவுத் திகதி கால வரையறையின்றி நீடிக்கப்பட்டுள்ளது. விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகளுக்காக 19000 ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர். இதுவரை சுமார் 13 ஆயிரம் விண்ணப்பங்கள் மாத்திரமே கிடைத்துள்ளதாகவும், மேலும் ஆறாயிரம் ஆசிரியர்களுக்கான பற்றாக்குறை நிலவுவதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், “மிக முக்கியமாக விஞ்ஞானப் பாடப் பிரிவின் மதிப்பீட்டுப் பணிகளுக்கே ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது. விண்ணப்பங்களை அனுப்புவதற்கான கால அவகாசம் கடந்த 8ஆம் திகதியுடன் நிறைவடைந்த நிலையில், தற்போதைய சூழலை கருத்திற்கொண்டு குறித்த கால அவகாசம் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், விடைத்தாள் மதிப்பீடு பணிகளுக்காக விண்ணப்பங்களை அனுப்புவதற்கு மேலும் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.