மாடுகளைத் திருடி இறைச்சியாக்கி விற்ற கும்பல் : முக்கிய சூத்திரதாரி கைது!

யாழ்ப்பாண மாவட்டத்தின் பல இடங்களில் மாடுகளைக் களவாடி இறைச்சியாக்கி விற்பனை செய்துவந்த கும்பல் ஒன்றின் முக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்தனர்.

திருட்டுக் கும்பலிடம் இறைச்சியை வாங்கி விற்பனை செய்தவரும் கைது செய்யப்பட்டுள்ளார் என்று கூறிய பொலிஸார், மேலும் நால்வர் தேடப்படுவதாகவும் குறிப்பிட்டனர்.

வடமராட்சி, துன்னாலையைச் சேர்ந்த 24 மற்றும் 26 வயதுடைய இரண்டு பேரே கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண நகரம், வட்டுக்கோட்டை, அளவெட்டி, தெல்லிப்பளை மற்றும் வடமராட்சி உட்படப் பல இடங்களில் 25 இற்கும் மேற்பட்ட மாடுகளைத் திருடி இறைச்சியாக்கி விற்பனை செய்துள்ளனர் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

5 பேர் கொண்ட இந்தக் கும்பல், பகலில் மோட்டார் சைக்கிளில் சென்று மாடுகளை நோட்டுமிட்டு வந்து இரவில் வாகனத்தில் சென்று இரும்புச் சங்கிலி போட்டு மாடுகளைப் பிடித்து, வாகனத்தில் ஏற்றி வந்து வடமராட்சி – கப்பூது வெளியில் வைத்து இறைச்சியாக்கி விற்பனை செய்தமை தெரியவந்துள்ளது.

இறைச்சியாக்கப்பட்ட மாடுகளின் எச்சங்கள் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன. திருட்டுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனம், இரும்புச் சங்கிலி மற்றும் வாள் என்பன பிரதான சந்தேக நபரிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!