பொலீசாரின் வாக்குறுதியை அடுத்து கடற்றொழிலாளர்களின் போராட்டம் கைவிடப்பட்டது!

சுருக்கு வலை உட்பட்ட சட்ட விரோத கடற்றொழிலுக்குத் தடை விதிப்பது தொடர்பில் ஒரு வார காலத்தினுள் தீர்வு வழங்கப்படும் என்று பொலிஸார் உறுதி அளித்ததைத் தொடர்ந்து
வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் சங்கங்கங்களின் போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்படதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுருக்கு வலை உட்பட்ட சட்ட விரோத கடற்றொழிலைத் தடுத்து நிறுத்துமாறு கோரி வடமராட்சி வடக்கின் 14 கடற்றொழிலாளர் சங்கங்களால் யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதேச செயலகம் முன்பாக பருத்தித்துறை வீதியை முற்றுகையிட்டு இன்று காலை போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இதனால் பருத்தித்துறை பிரதேச செயலகம்தின் செயற்பாடுகள் முடக்கப்பட்டிருந்ததுடன், பருத்தித்துறை வீதியூடான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பிரதேச செயலர் மற்றும் பொலிஸார் மேற்கொண்ட சமரசப் பேச்சையடுத்து , கடற் படையினருடன் கலந்துரையாடி ஒரு வார காலத்துக்குள் சுருக்கு வலை உட்பட்ட சட்ட விரோத கடற்றொழிலைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படுமென பொலிஸார் வாக்குறுதியளித்தனர்.

பொலீசாரின் வாக்குறுதியை அடுத்து போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. போராட்டத்தின் முடிவில் ஜனாதிபதிக்கான மகஜரொன்று பிரதேச செயலரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

தமது பிரச்சினை தொடர்பில் ஒரு வார காலத்தினுள் தீர்வு கிடைக்காவிடில் வட மாகாணம் தழுவிய மாபெரும் போராட்டம் ஒன்று நடாத்தப்படும் எனத் தெரிவித்த போராட்டக்காரர்கள், தமது பிரச்சினை தொடர்பாகக் கடற்றொழில் அமைச்சர் கரிசனையுடன் செயல்படவில்லை என்றும் குற்றஞ்சாட்டினார்.

இதேநேரம், நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகள், கடற்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்த கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்து, அதன் போது கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகளும் அழைக்கப்பட்டு பிரச்சினைகளை பேசித் தீர்க்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டதை அடுத்து பிரதேச செயலக செயற்பாடுகள் இயல்பு நிலைக்கு திரும்பியதுடன், பருத்தித்துறை வீதியூடான போக்குவரத்தும் வழமை போன்று நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!