சீனாவில் உள்ள தனியார் மிருகக் காட்சி நிறுவனம் ஒன்றில் இருந்து விவசாய அமைச்சுக்குக் கிடைத்த எழுத்து மூலக் கோரிக்கையின் அடிப்படையிலேயே சீனாவுக்குக் குரங்குகளை ஏற்றுமதி செய்வதற்கான முன்மொழிவு அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டது எனினும் இது குறித்து அரசாங்கத்தின் எந்தவொரு மட்டத்திலும் பேசப்படவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
சீனாவிலுள்ள மிருகக் காட்சிச்சாலை நிறுவனம் ஒன்று கடிதம் மூலம் கோரியதன் அடிப்படையில், சீனாவில் தனியார் நிறுவனம் ஒன்றினால் நடத்தப்படும் 1000 உயிரியல் பூங்காக்களுக்கு,இலங்கையில் குறிப்பிட்ட சில பயிரினங்களை அழிக்கும் “ரோக்” வகை கட்டாக்காலிக் குரங்குகளை ஏற்றுமதி செய்ய விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர முன்மொழிந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.
சீன நிறுவனத்துடன் இணைந்து குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும், சீனாவிற்கு குரங்குகளை ஏற்றுமதி செய்வது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர அமைச்சரவைக்கு அறிவித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
எனினும், உயிருள்ள விலங்குகளை நாடுகளுக்கிடையில் சுதந்திரமாக பரிமாறிக் கொள்ள முடியாது எனச் சுட்டிக் காட்டியுள்ள அமைச்சரவைப் பேச்சாளர், தற்போதுள்ள சட்டங்களின் படி அவ்வாறான பரிமாற்றங்களை மேற்கொள்ள முடியாது எனவும் தெரிவித்தார்.