எதிர்க்கட்சிகளின் ஏற்பாட்டில் “பாசத்துக்கான யாத்திரை” நாளை ஆரம்பம் : 21 ஆம் திகதி கொழும்பில் முடியும்!

அரசாங்கத்துக்கு எதிராக  எதிர்க்கட்சிகளின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் உட்பட நாட்டின் பிரதான ஐந்து நகரங்களில் இருந்து கொழும்பு நோக்கி இடம்பெறவுள்ள “பாசத்துக்கான யாத்திரை” நாளை புதன்கிழமை ஆரம்பமாகவுள்ளது. இந்த யாத்திரை எதிர்வரும் 21 ஆம் திகதி தலைநகர் கொழும்பில் முடியவுள்ளது.

எதிர்க் கட்சிகளால் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள இந்த “பாசத்துக்கான யாத்திரை” யின் முடிவில் அரசாங்கத்தின் உண்மை முகம் அம்பலமாகும் என்று சஜித் பிரேமதாசா தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிச் செயலாளர் உமாச்சந்திர பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பு இன்று செவ்வாய்க்கிழமை யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்றது. இந்த ஊடக சந்திப்பின் போதே ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிச் செயலாளர் உமாச்சந்திர பிரகாஷ் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர்மேலும் தெரிவிக்கையில், “அரசாங்கத்தின் அடக்குமுறை ஆட்சிக்கு எதிராக நாளை 19 ஆம் திகதி யாழ்ப்பாணம், மன்னார், காத்தான்குடி, கண்டி மற்றும் கதிர்காமம் ஆகிய ஐந்து இடங்களில் இருந்து ‘பாசத்துக்கான யாத்திரை’ இடம்பெறவுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தலைமையில் நாட்டின் 5 இடங்களில் இருந்து நாளை ஆரம்பமாகும் ‘பாசத்துக்கான யாத்திரை’ நாளை 19 ஆம் திகதி புதன்கிழமை ஆரம்பமாகி, எதிர்வரும் 21 ஆம் திகதி கொழும்பைச் சென்றடையும். அதன் இறுதி நிகழ்வில் நாட்டின் பல உண்மைகள் தெரியவரும். அரசாங்கத்தின் அடக்குமுறை ஆட்சிக்கு எதிராக எதிர்க் கட்சிகள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்யும் இந்த யாத்திரையில் ஐக்கிய மக்கள் சக்தியும் கைகோர்க்கிறது.

வட பகுதிக்கான யாத்திரை நாளை காலை நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலில் இருந்து, ஆலய வழிபாடுகளைத் தொடர்ந்து ஆரம்பமாகும். யாழ்ப்பாணத்தில் கையெழுத்து சேகரிப்பு இடம்பெற்று கிளிநொச்சி, வவுனியா என யாத்திரை செல்லவுள்ளது. இலங்கையில் உள்ள அனைத்து மக்களும் இலங்கையர்களாக வாழ்வதற்கான அடிப்படை உரிமையை கோருவதே இந்த யாத்திரையின் முக்கியமான நோக்கம்” என்றார்.

இந்த ஊடக சந்திப்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணத் தொகுதியின் பிரதான அமைப்பாளர் பி. ஜெயேந்திரன் மற்றும் வட்டுக்கோட்டைத் தொகுதியின் பிரதான அமைப்பாளர் எம். சதாசிவமும் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!