திறைசேரி 500 மில்லியன் ரூபாவை நாளை மறுதினம் புதன்கிழமைக்குள் தேர்தல் திணைக்களத்துக்காக விடுவிக்கப்பாவிட்டால் அறிவிக்கப்பட்டபடி எதிர்வரும் 28 முதல் 31 ஆம் திகதிக்குள் தபால்மூல வாக்களிப்பை நடாத்த முடியாது. புதிய திகதிகளை அறிவிக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் ஏப்ரல் 25ஆம் திகதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான தபால்மூல வாக்களிப்புக்கு எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதிவரை காலம் குறிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், தபால்மூல வாக்குச் சீட்டுக்களை அச்சிடுவதற்குப் போதிய கால அவகாசம் இல்லை என அரசாங்க அச்சகப் பணிப்பாளர் கங்காணி லியனகேயும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் நாளை மறுதினம் புதன்கிழமைக்குள் தமது ஆணைக்குழு 500 மில்லியன் ரூபாவை முற்பணமாகப் பெற்றுக் கொள்ளாத பட்சத்தில் தபால் மூல வாக்களிப்புக்கான புதிய திகதிகள் அறிவிக்கப்பட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் நிமால் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை மேற்கொள்வதற்கு இந்த மாத இறுதிவரை திறைசேரியிலிருந்து மொத்தம் ஆயிரத்து 100 மில்லியன் ரூபா தேவைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை எதிர்வரும் 20ஆம் திகதிக்குள் பணம் கிடைக்காவிட்டால், தாம் நீதிமன்றத்துக்குச் சென்று தமக்கான நிதியை திறைசேரி ஒதுக்கீடு செய்யாதது குறித்து முறையிட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் வாக்குச்சீட்டு அச்சிடும் பணிக்காக 533 மில்லியன் ரூபா கோரப்பட்ட போதிலும், அது கிடைக்கவில்லை என்பதால் அச்சடிக்கும் பணியை முன்னெடுக்க முடியவில்லை என்று அரச அச்சக பணிப்பாளர் கங்காணி லியனகே தெரிவித்துள்ளார்.
தேர்தல் தொடர்பான 2 ஆயிரத்து 500 அச்சுப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டிய நிலையில், இதுவரை 54 பணிகள் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.