வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர் சங்கத்தின் தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதா வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.
காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி கோரி வவுனியா ஏ9 வீதியில் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு முன்பாக கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் 2210 ஆவது நாட்களைக் கடந்து தொடர்கிறது. போராடும் தாய்மார் மற்றும் உறவினர்கள் சுழற்சி முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் அமர்ந்துருந்து போராட்டத்தைத் தொடர்வதற்காக அந்தப் பகுதியில் கொட்டகை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
அந்தக் கொட்டகைக்கு அருகிலுள்ள மின் கம்பத்தின் மின் விளக்கு இணைப்பிலிருந்து மின்சாரம் பெறப்பட்டு போராட்ட கொட்டகைக்கு ஒளி வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கொழும்பில் இருந்து வந்த மின்சார சபையினர் சட்டவிரோதமாக மின்சாரம் பெற்றதாக தெரிவித்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர் சங்கத்தின் தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதாவுக்கு எதிராகப் செய்த முறைப்பாட்டை அடுத்தே அவர் கைது செய்யப்பட்டுள்ளார் எனப் பொலீசார் தெரிவிக்கின்றனர்.
இதேநேரம், காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி கோரி உறவினர்களால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டத்தை அச்சுறுத்தி அடிபணிய வைக்கும் வகையில் – காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை மிரட்டும் வகையில் இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.