தமிழ் மக்கள் கூட்டணியின் பெயரில், அதன் செயலாளர் நாயகத்துக்குக் கூடத் தெரியாமல் எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலைச் சாட்டாக வைத்து வெளிநாடுகளில் நிதி சேகரிப்பில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். பொய் கூறி நிதி சேகரிப்பில் ஈடுபடுபவர்களுக்கு எவரும் பங்களிப்பு எதையும் வழங்க வேண்டாம் எனவும், கட்சியின் சார்பில் ஆதரவு மேலீட்டால் நிதி சேகரிப்பில் ஈடுபடும் உறுப்பினர்களையும் அவ்வாறு செய்ய வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன் என்றும் அக் கட்சியின் செயலாளர் நாயமும், நீதியரசருமான க.வி.விக்னேஸ்வரன் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையின் முழு விவரமும் வருமாறு, “எனது தலைமையில் இயங்கி வரும் தமிழ் மக்கள் கூட்டணியின் பெயரில் அதன் செயலாளர் நாயகம் ஆகிய எனக்குத் தெரிவிக்காது, எனது சம்மதத்தையும் பெறாது வெளிநாடுகளில் எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலைச் சாட்டாக வைத்து நிதி சேகரிப்பில் சிலர் ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் எனக்குக் கிடைக்கப் பெற்றுள்ளன.
நானோ எனது கட்சியோ, எமது கட்சி உறுப்பினர்களோ இது பற்றி எந்த வித நிதி சேகரிப்பிலும் இறங்கும் படி எவரையும் கோரவில்லை. எனது கட்சியின் ஆதரவாளர்களுக்கும் அனுதாபிகளுக்கும் இத்தால் இதனைத் தெரியப்படுத்தி இவ்வாறாகப் பொய் கூறி நிதி சேகரிப்பில் ஈடுபடுபவர்களுக்கு எவரும் பங்களிப்பு எதையும் வழங்க வேண்டாம் எனத் தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன். இந் நிதி சேகரிப்பானது இலங்கையிலிருக்கும் சிலரின் ஆதரவுடன் தமது சொந்த நலன்களுக்காகக் கூட இடம்பெறக்கூடும். அப்படி யாராவது எமது கட்சியின் சார்பில் ஆதரவு மேலீட்டால் செயற்பட்டுவரின் அவர்களையும் அவ்வாறு செய்ய வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.
அரசியல் கட்சிகளின் நிதி அறிக்கைகள் வருடா வருடம் தேர்தல் ஆணையாளருக்கும், தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்கும் தவறாது அனுப்பப்பட வேண்டுவன. சென்ற ஆண்டுக்கான அறிக்கையை அனுப்புமாறு ஆணைக்குழு இப்பொழுது கோரியிருக்கின்றது. அவ் அறிக்கைளை இப்பொழுது நாம் தயாரித்துக் கொண்டு இருக்கின்றோம். அப்படி இருக்கையில் இக் கணக்கு அறிக்கைகளில் காட்டப்படாது நிதி சேகரிக்கப்பட்டு செலவழிக்கப்படாது இருப்பதையோ அல்லது அந் நிதி எமது கட்சி சார்பில் செலவு செய்தமைக்கு அத்தாட்சியையோ பெற்று அது நிரூபிக்கப்பட்டால் கட்சியின் நற் பெயருக்கு களங்கம் ஏற்படுவது மட்டுமன்றி பொய்யான கணக்கறிக்கைகளை தயாரித்து அனுப்பியமைக்காக கட்சியின் பதிவைக்கூட இரத்துச் செய்வதற்கு இடமிருக்கின்றது.
எனவே தயவு கூர்ந்து மேற்படி நடவடிக்கைகளில் எமக்கு தெரியாமல் ஈடுபட வேண்டாமென வெளிநாடுகளிலும், இலங்கையிலும் இருக்கும் அன்பான ஆதரவாளர்களையும், அனுதாபிகளையும் தயவுடன் வேண்டி நிற்கின்றேன். நாங்கள் ஏற்கனவே வங்கி கணக்கு விபரங்களுடன் எம் மக்களிடம் இருந்து நன்கொடைகளைக் கோரியுள்ளோம். அதன் படி நன்கொடைகள் குறித்த வங்கிக் கணக்கிற்குப் போடப்பட்டால் உரிய இரசீதுகள் அனுப்பப்படும். எமது சார்பில் என்று கருதி தனிப்பட்டவர்களுக்குக் கூட பணத்தைக் கொடுப்பதை என் தமிழ் உறவுகள் தவிர்க்க வேண்டும்” என்றுள்ளது.