இலங்கை மின்சார சபைக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நிராகரிக்கப்பட்டுள்ளது.
நடைபெற்றுக் கொண்டிருக்கும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக் காலத்தில் – எதிர்வரும் பெப்ருவரி 17 வரை தடையற்ற மின் விநியோகத்தை மேற்கொள்வதற்கு உடன்பட்ட இலங்கை மின்சார சபை, மின் வெட்டை நடைமுறைப்படுத்தி வருவதற்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கே இன்று நிராகரிக்கப்பட்டுள்ளது.
மின் விநியோகத்தில் பங்காளர்களான இலங்கை மின்சார சபை, மின் வலு மற்றும் எரிசக்தி அமைச்சு மற்றும் இலங்கை பெற்றோலிய கூட்டுத் தாபனத்தின் அதிகாரிகளுக்கும், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின் எட்டப்பட்ட உடன்படிக்கையின் படி கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக் காலத்தில் – எதிர்வரும் பெப்ருவரி 17 வரை தடையற்ற மின் விநியோகத்தை வழங்காமல், தீர்ப்பை அவமதிக்கும் வகையில் இலங்கை மின்சார சபை மின்வெட்டை நடைமுறைப்படுத்துவதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இலங்கை மின்சார சபைத் தலைவர், மின் வலு மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆகியோருக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் இந்தச் சமர்ப்பணம் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது, நீதிமன்றம் மனுவை நிராகரித்துத் தீர்ப்பளித்தது.