யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனல்ட் தலைமையிலான மாநகரசபை துறைசார் அதிகாரிகள் குழு இன்று யாழ். நகரில் விசேட கள விஜயம் ஒன்றை மேற்கொண்டு மக்களுக்கு அசௌகரியங்களை ஏற்றபடுத்தும் பல செயற்பாடுகளுக்கு உடனடியாகத் தீர்வு வழங்கப்பட்டது என யாழ். மாநகர முதல்வரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
யாழ். மாநகர முதல்வரின் இந்தக் கள விஜயம் தெடார்பில், முதல்வரின் ஊடகப் பிரிவு அனுப்பி வைத்துள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் வருமாறு,
நகர்ப்புறத்தில் அமைந்துள்ள மாநகர சிற்றங்காடி, பேரூந்து நிலையக் கடைத் தொகுதிகள், நவீன சந்தைக் கட்டிடத் தொகுதியில் உள்ள கடைகள் உள்ளிட்ட பகுதிகளில் கடைகளின் செயற்பாடுகள், நடைபாதைக்கு தடையாகவுள்ள விற்பனைகள் தொடர்பில் அவதானிக்கப்பட்டு உடனடியாக அவற்றை அகற்றி நடைபாதைக்குள்ள தடைகளை நீக்குவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அங்காடியில் உள்ள சுகா தார நிலமைகள் தொடர்பில் ஆராயப்பட்டது. தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்வதற்கு முதல்வர் உத்தரவிட்டார். அதே போன்று வியாபார நிலையங்களை நடாத்தி வருபவர்கள் நடைபாதை போக்குவரத்திற்கு இடையூறு இன்றித் தமது வியாபார நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று உடனடி அறிவித்தல்களை உரிய கடை நடாத்துனர்களுக்கு வழங்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
குறிப்பாக நவீன சந்தை கட்டடத்தொகுதியில் உள்ள கடைகள் சுகாதார மற்றும் நடைபாதை போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு இடையூறாக மேற்கொள்ளும் விற்பனைகளை தவிர்ப்பதற்கான உத்தரவுகளை முதல்வர் பிறப்பித்தார். குறித்த விடயங்களை அவதானித்து உரிய முறையில் அறிக்கையிடுமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மேலும் நகர்ப்புறம், நவீன சந்தை கட்டடத்தொகுதியோடு அமையப்பெற்றுள்ள மலசலகூடங்களை முறையாக பராமரிக்காமை தொடர்பில் அவதானிக்கப்பட்டு உரிய முறையில் துப்பரவு செய்து பராமரிப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
முதல்வரின் இக் களவிஜயத்தில் யாழ். மாநகர சபை – பெரியகடை வேட்பாளர் சு.சுதன், மாநகர பொறியியலாளர், சுகாதார மேற்பார்வையாளர்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், அதிகாரிகள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.