கடந்த வருடம் இடம்பெற்ற “கோட்டா கோ ஹோம்” போராட்டத்தின் போது ஜனாதிபதி மாளிகையில் இருந்து ஆர்ப்பாட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்ட பின்னர் பொலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட பணத்தை மீளத் தருமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ முன்வைத்த கோரிக்கை கோட்டை நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற பாரிய அரச எதிர்ப்பு போராட்டத்தின் போது, ஆர்ப்பாட்டக்காரர்களால் கண்டுபிடிக்கப்பட்ட சுமார் 17.5 மில்லியன் ரூபா பணத்தைத் தனது கட்சிக்காரரிடம் ஒப்படைக்குமாறு முன்னாள் ஜனாதிபதியின் சட்டத்தரணி நீதவானிடம் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த கோரிக்கையை நிராகரித்த கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே, பணத்தை மீளளிப்பதற்கான உத்தரவைப் பிறப்பிப்பதற்கு முன்னர் பணத்தொகை தொடர்பான விசாரணையை நடத்துவது நீதிமன்றத்தின் பொறுப்பு என்று தெரிவித்தார் என லங்கா தீப செய்தி வெளியிட்டுள்ளது.
போராட்டத்தின் ஒரு கட்டத்தில் ஜனாதிபதி மாளிகையினுள் அத்துமீறி உள்நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள அங்கிருந்த சுமார் 17.5 மில்லியன் ரூபாவைக் கைப்பற்றியிருந்தனர். அதன் பின் அந்தப் பணம் கோட்டைப் பொலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அந்தப் பணத்தைத் தன் கட்சிக்காரரிடம் மீளளிக்க வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவின் சட்டத்தரணி முன்வைத்த சமர்பணத்தையே கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே நிராகரித்துள்ளார்.
கைப்பற்றப்பட்ட பணம் தொடர்பில், இலஞ்ச ஊழல் மற்றும் மோசடி குறித்த விசாரணைகளை மேற்கொள்ள வேண்டியிருப்பதனால் அதனை உடனடியாக விடுவிக்க முடியாது என்றும் குறித்த பணத்துக்கு வேறெவரும் உரிமை கோராத காரணத்தினாலும், விசாரணைகள் முடிவுறாத நிலையிலும் அதனை விடுவிக்க முடியாது எனவும் நீதவான் மேலும் தெரிவித்துள்ளார்.
குறித்த பணம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.