இலங்கையின் பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு நாடு முழுவதிலும் அதிக சம்பளத்திற்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட நிபுணர்கள் மற்றும் ஆலோசகர்களைக் கொண்ட அபிவிருத்தித் திட்டங்களை நிறுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அமைச்சரவை பேச்சாளரும், பெருந் தெருக்கள், போக்குவரத்து மற்றும் வெகுஜன ஊடக அமைச்சருமான பந்துல குணவர்தன இந்தத் தகவலைத் தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பின் போதே அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையின் பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இது தொடர்பான பிரேரணை முன்வைக்கப்பட்டது. சில திட்ட அலுவலகங்கள் மற்றும் பெரிய அளவிலான அபிவிருத்தித் திட்டங்களின் திட்ட முகாமைத்துவ அலகுகளின் செயல்பாடுகளை மூடுவது அல்லது இடை நிறுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.
அதிக சம்பளத்துக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட நிபுணர்கள் மற்றும் ஆலோசகர்களைக் கொண்டு இந்த அலுவலகங்கள் இயங்குவதாக தெரிவித்த அமைச்சர் குணவர்தன, கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக பல திட்ட அலுவலகங்களை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
அமைச்சின் முன்னாள் செயலாளர் எச்.ஜி.கமல் பத்மசிறி தலைமையிலான குழுவொன்று இவ்வாறான அலுவலகங்களின் அவசியம் பற்றி ஆராய்ந்து அறிக்கையிட நியமிக்கப்பட்டிருந்தது. அந்தக் குழுவின் பரிந்துரையின் படி, 55 அலுவலகங்களை மூடுவதற்கும், 32 அலுவலகங்களின் செயற்பாடுகளை இடைநிறுத்துவதற்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தின் போது, பல அமைச்சர்கள் இந்த அலுவலகங்களை திறம்பட, வினைத்திறனுடன் நடத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அவற்றைத் தொடர்ந்து இயக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் சுட்டிக் காட்டியதாக அமைச்சர் குணவர்தன விளக்கினார்.
எவ்வாறாயினும், எந்தெந்த அலுவலகங்களை மூடலாம் மற்றும் இடைநிறுத்தப்படாமல் செயற்படுத்தலாம் என்பதை அடையாளம் காண நிதி அமைச்சுடன் கலந்துரையாடுமாறு அமைச்சர்களுக்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாகவும், ஜனாதிபதியின் பிரேரணை அவசியமான நடவடிக்கை என்பதை அமைச்சர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர் என்றும் அமைச்சரவைப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.