இலங்கையில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பதிவு செய்யப்படாத மருத்துவ நிறுவனங்கள் இருப்பதாக சுகாதார அமைச்சின் தனியார் சுகாதார சேவைகள் ஒழுங்குமுறை பேரவை வெளிப்படுத்தியுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் பதின்மூன்றாம் திகதி தனியார் சுகாதார சேவைகள் ஒழுங்குமுறை பேரவையினால் நடத்தப்பட்ட கூட்டத்தில் பதிவு செய்யப்படாத அனைத்து தனியார் மருத்துவ நிறுவனங்களுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க தனியார் மருத்துவ நிறுவனங்களின் பதிவுச் சட்ட விதிகளின் படி, இலங்கையிலுள்ள அனைத்து தனியார் மருத்துவ நிறுவனங்களும் சுகாதார அமைச்சின் கீழ் உள்ள தனியார் சுகாதார சேவைகள் ஒழுங்குமுறை பேரவையில் பதிவு செய்யப்பட வேண்டும்.
தற்போது, 296 தனியார் மருத்துவமனைகள், 190 பல் வைத்திய நிலையங்கள், 627 முழு நேர பொது மருத்துவ மையங்கள், 27 முழு நேர சிறப்பு மருத்துவ சேவை மையங்கள், 1654 மருத்துவ ஆய்வகங்கள், 818 மருத்துவ மையங்கள், 432 தனியார் மருத்துவ நிறுவனங்கள், 193 கூடுதல் நேர பல் சேவை மையங்கள், 1,809 கூடுதல் மருத்துவ சேவை மையங்கள், 39 கூடுதல் சிறப்பு மருத்துவம் சேவை மையங்கள் மற்றும் 31 ஆம்புலன்ஸ் சேவைகள் மட்டுமே தனியார் சுகாதார சேவைகள் ஒழுங்குமுறை பேரவையில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பதிவு செய்யப்படாத மருத்துவ நிலையங்களைப் பதிவு செய்வதற்கு எதிர்வரும் பெப்ருவரி 28 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும், அவ்வாறு பதிவு செய்யாத வைத்திய நிலையங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுகாதார அமைச்சின் தனியார் சுகாதார சேவைகள் ஒழுங்குமுறை பேரவையின் பணிப்பாளர் மருத்துவர் தம்மிக்க அழகப்பெரும தெரிவித்துள்ளார்.