ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் நான்காவது கூட்டத் தொடர் நாளை ஆரம்பம்!

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் நான்காவது கூட்டத் தொடர் நாளை புதன்கிழமை காலை 10 மணிக்கு நாடாளுமன்ற சம்பிரதாயங்களுக்கு அமைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. புதிய கூட்டத்தொடர் ஆரம்ப நிகழ்வு இம்முறை மிகவும் எளிமையான முறையில் இடம்பெறவுள்ளது.

வைபவ ரீதியான நிகழ்வுக்கான ஒத்திகை நேற்று திங்கட்கிழமை நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது. கோட்டை ஜனாதிபதி மகளிர் பாடசாலையின் மாணவிகள் உட்பட பலர் இந்த ஒத்திகையில் பங்குப்பற்றினர்.

அரசியலமைப்பின் 33ஆம் உறுப்புரையின் (அ) மற்றும் (ஆ) உப பிரிவுகளுக்கு அமைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றக் கூட்டத் தொடரை ஆரம்பித்து வைத்து, அக்கிராசனத்தை ஏற்று அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை முன்வைப்பார்.

நாடாளுளுமன்றத்துக்கு ஜனாதிபதி வருகை தரும் நிகழ்வை மிகவும் எளிமையான முறையில் நடத்துமாறு ஜனாதிபதி நாடாளுமன்றத்துக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.இதற்கமைய புதிய கூட்டத்தொடர் ஆரம்பிக்கும் போது ஜனாதிபதியின் வருகையின் நிமித்தம் பாரம்பரியமாக இடம்பெறும் மரியாதை வேட்டுக்கள் தீர்த்தல்,வாகனத் தொடரணி போன்ற நிகழ்வுகள் இம்முறை இடம்பெறாது.

சபாநாயகர் மற்றும் அவரது பரியாரின் வருகையைத் தொடர்ந்து பிரதமர் நாடாளுமன்றத்துக்கு வருகை தருவார்,இதனை தொடர்ந்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முதல் பெண்மணியின் வருகை இடம்பெறவுள்ளது.

சபாநாயகர் மற்றும் நாடாளுமன்றச் செயலாளர் நாயகம் ஆகியோர் நாடாளுமன்றத்தின் பிரதான வாயிலில் இருந்து ஜனாதிபதி மற்றும் அவரது பாரியாரை வரவேற்பார்கள். படைக்கல சேவிதர்,பிரதி படைக்கல சேவிதர் மற்றும் உதவி படைக்கல சேவிதர் ஆகியோர் முன்செல்ல சபாநாயர் மற்றும் நாடாளுமன்றச் செயலாளர் நாயகம் ஜனாதிபதியை நாடாளுமன்ற கட்டத்திற்குள் அழைத்துச் செல்வார்கள்.

நாடாளுமன்றத்தின் பிரதான நுழைவாயிலுக்கு அருகே பாடசாலை மாணவிகள் ஜயமங்கல கீதம் இசைப்பார்கள். அதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற சம்பிரதாயங்களுக்கு அமைய பிரதி படைக்கல சேவிதர் செங்கோலை கையில் ஏந்தியவாறு படைக்கல சேவிதர், ஜனாதிபதி, சபாநாயகர் , செயலாளர் ஆகியோர் வரிசைப்படி நாடாளுமன்ற சபா மண்டபத்துக்குள் செல்வார்கள்.

ஜனாதிபதி அக்கிராசனத்தில் அமர்ந்து சபைக்கு தலைமை தாங்குவார். நாடாளுமன்ற குழு நிலையின் போது அமரும் கீழ் பகுதியில் உள்ள ஆசனத்தில் சபாநாயகர் செயலாளர் குழுவினருடன் அமர்வார். இதன் பின்னர் அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரையை ஜனாதிபதி ஆற்றுவார்.இதனை தொடர்ந்து நாடாளுமன்ற அமர்ந்து நாளை மறுதினம் வியாழக் கிழமை வரை ஒத்திவைக்கப்படும்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த மாதம் 27 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத் தொடரை நாளை 8 ஆம் திகதி புதன்கிழமை வரை ஒத்திவைத்திருந்தார்.

நிறைவடைந்த ஆறு மாத காலத்திற்குள் ஒன்பதாவது பாராளுமன்றத்தின் கூட்டத்தொடர் இரண்டு தடவைகள் ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!