காணாமல் போன மொரட்டுவ பல்கலையின் புதுமுக மாணவன் தனித்திருந்த நிலையில் மீட்பு!

யாழ்ப்பாணத்தில் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்ட மொறட்டுவ பல்கலைக்கழகப் புதுமுக மாணவன் ஒருவர் தெல்லிப்பளையில் உள்ள பாழடைந்த வீடொன்றில் தனித்திருந்த போது பொலீசாரால் மீட்கப்பட்டுள்ளார்.

இந்த மாணவன் கடுமையான பகடிவதைக்கு உள்ளாகி மனம் நொந்த நிலையில் வீட்டை விட்டு வெளியேறி இருந்ததாகவும், மாணவன் தன் உயிரை மாய்க்க முயன்றுள்ளதாகவும் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

இலங்கைப் பல்கலைக்கழகங்களில் பகடிவதை மற்றும் புதுமுக மாணவர்கள் மீதான சித்திரவதைகள் அடக்கு முறைகள் அதிகமாகக் காணப்படுகின்ற போதிலும், மொரட்டுவ பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த சிரேஷ்ட தமிழ் மாணவர்கள் அத்தகைய செயற்பாடுகள் எதிலும் ஈடுபடுவதில்லை என்றும், இளைய தமிழ் மாணவர்களுக்காக வழிகாட்டல் செயலமர்வுகள் மற்றும் பயிற்சிப் பரீட்சைகளை நடத்தி வருகின்றோம் எனவும் அண்மையில் குறிப்பிட்டிருந்த நிலையில், யாழ்பாணத்தில் தமிழ் மாணவன் ஒருவர், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிரேஷ்ட மாணவர்களால் உயிரை மாய்க்க முற்படுமளவுக்குப் பகடிவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளமை சமூகத்தில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியை சேர்ந்த மொறட்டுவ பல்கலைக்கழகத்தின் புதுமுக மாணவன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வீட்டை விட்டு வெளியே சென்ற நிலையில் காணாமல் போனதாக அவரது குடும்பத்தினரால் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.

இந்நிலையில், தெல்லிப்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள பாழடைந்த வீடொன்றில் இளைஞன் ஒருவர் தங்கி இருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்த பொலிஸார் இளைஞனைக் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர். விசாரணைகளின் போது அந்த இளைஞர், அண்மையில் காணாமல் போன கோப்பாயைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவன் எனக் கண்டறிந்தனர்.

தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் , பல்கலைக்கழகத்தில் தான் கடுமையான பகடிவதைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும், தினமும் மாலை 06 மணி முதல் இரவு 10 மணி வரையில் சிரேஷ்ட மாணவர்களுடன் தொலைபேசியில் உரையாடுமாறு கட்டாயப்படுத்தப்பட்டதாகவும், “சிரேஷ்ட மாணவர்களுக்கு மரியாதை கொடுப்பேன்” என ஆயிரம் தடவைகள் எழுதப் பணிக்கப்பட்டதாகவும் அந்த கொடுமைகள் – சித்திரவதைகள் தாங்காது , பல்கலைக்கழகத்தில் இருந்து வீடு திரும்பியதாகவும் மாணவன் கூறியுள்ளார்.

தான் மீண்டும் பல்கலைக்கழகத்துக்குச் செல்ல மாட்டேன் எனக் கூறி வீட்டில் தங்கியிருந்த வேளை, யாழ்ப்பாணம் வந்த சிரேஷ்ட மாணவர்கள் இருவர் தன்னை அழைத்துச் சென்று தனிமையான இடத்தில் வைத்து தாக்கி வீட்டிற்கு செல் எனவும் மீண்டும் பல்கலைக்கழகம் வா என்றும் மிரட்டி சென்றதாகவும் விசாரணைகளில் அம் மாணவன் தெரிவித்துள்ளார்.

அந்தச் சம்பவத்தினால் தான் வீட்டை விட்டு வெளியேறி காங்கேசன்துறை கடற்பகுதிக்கு சென்று இரண்டு நாட்கள் அநாதரவாகத் திரிந்ததாகவும் , பின்னர் அங்கிருந்து தெல்லிப்பளைப் பகுதியில் உள்ள ஆட்கள் அற்ற வீட்டில் தங்கி இருந்தேன் எனவும் விசாரணைகளில் தெரிவித்துள்ளார்.

மாணவனின் கைகள் மற்றும் கழுத்து பகுதிகளில் வெட்டு காயங்களும் காணப்படுகின்றன. தனது உயிரை மாய்க்க அவர் முயன்றிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகித்துள்ள நிலையில் மாணவனை மருத்துவ பரிசோதனைக்காக சட்ட வைத்திய அதிகாரியிடம் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!