“இலங்கையின் சுதந்திர நாள் – தமிழர்களுக்குக் கரிநாள்” பேரணி ஆரம்பம்! (மேலதிக படங்கள் இணைப்பு)

இலங்கையின் சுதந்திர தினத்தைத் தமிழர்களின் கரிநாளாகப் பிரகடனப்படுத்தி தமிழர்களின் அபிலாசையைச் சர்வதேச சமூகத்துக்கு வெளிப்படுத்தும் வகையில் யாழ் பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்படும் வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய எழுச்சிப் பேரணி சற்று முன்னர் ஆரம்பமாகியது.

யாழ் பல்கலைக்கழக மாணவ ஒன்றியம், கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்துடன் இணைந்து இலங்கையின் சுதந்திரதினமான பெப்ரவரி 4ஆம் திகதியைக் கரிநாள் எனப் பிரகடனப்படுத்தி, சிறிலங்கா அரசு தமிழ் மக்கள் மீது தொடர்ச்சியாக மேற்கொண்டுவரும் ஆக்கிரமிப்புக்கள், அடக்கு முறைகளை எதிர்த்தும், ஆக்கிரமிப்பு சிங்கள இராணுவம் தமிழ் மண்ணிலிருந்து வெளியேற வேண்டும் என்பதை வலியுறுத்தியும், தமிழ்த் தேசிய இனத்தின் பிறப்புரிமையான சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தியும், இலங்கையின் இன்றைய பொருளாதாரப் பின்னணியில் எழுந்துள்ள சூழலில் ஏற்பட்டுள்ள அழுத்தங்கள் காரணமாக முன்னெடுக்கப்பட்டுவரும் பேச்சுவார்த்தை எனும் போலி நாடகத்தினை தோலுரித்து சர்வதேச சமூகத்திற்கு காட்டவேண்டிய அவசியத்தாலும், கூட்டாக தமிழ் மக்கள் தமது நிலைப்பாடுகளை வலுவாக முன்வைக்க வேண்டியதன் அவசியத்தின் அடிப்படையிலும் வடக்கிலிருந்து கிழக்கு வரையான பேரணியொன்றை நடாத்துவதற்கு அழைப்பு விடுத்திருந்தது.

இந்தப் பேரணியில், சிவகுரு ஆதின முதல்வர் தவத்திரு வேலன் சுவாமிகள், கிறிஸ்தவ மதகுருமார்,  நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்கள், வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பல நூற்றுக் கணக்காணோர் கலந்து கொண்டனர்.

இதேநேரம், போராட்டம் ஆரம்பிப்பதற்கு சற்று முன்னர் பல்கலைக்கழக வாயிலுக்கு முன்னால் கூடிய பொலீசார் “தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கூட்டங்கள் கூடுவதற்கும், வாகன ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் நடாத்துவதற்கும் தடை உள்ளதாகவும், மீறும் பட்சத்தில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!