மாணவன் மரணம்: வைத்தியசாலைக்கு முன்பாக பொதுமக்கள் போராட்டம்!

அம்பாறை மாவட்டம், திருக்கோவில் மெதடிஸ்த தமிழ் மகா வித்தியாலய மாணவனின் மரணத்திற்கு நீதி கோரி திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக பொதுமக்கள் இன்று போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

திருக்கோவில் மெதடிஸ்த தமிழ் மகா வித்தியாலயத்தில் இன்று காலை விளையாட்டு போட்டியின் போது மரதன் ஓட்டப்போட்டியில் பங்கேற்ற மாணவன் திடிரென மயக்கமுற்ற நிலையில் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

பின்னர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யபட்ட நிலையில் அங்கு அம்மாணவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருக்கோவிலை சேர்ந்த 16 வயதுடைய ஜெயக்குமார் விதுர்ஜன் எனும் மாணவனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

இதனை அடுத்து குறித்த மாணவன் உயிரிழந்த சம்பவத்தை அறிந்த பாடசாலை மாணவரகள் பொதுமக்கள் மரணமடைந்த மாணவனுக்கு சிகிச்சை அளிக்க தவறிய திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக ஒன்று கூடி, மாணவனின் மரணத்திற்கு வைத்தியர்களின் அலட்சிய போக்கே காரணம் என தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் உயிரிழந்த மாணவன் எந்தவொரு சிகிச்சையுமின்றி மூன்று மணித்தியாலங்கள் இருந்ததாகத் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு மேலதிக பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டமையால் அங்கு பதற்றமானதொரு சூழலும் ஏற்பட்டது. சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!