இத்தாலி இலங்கை சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் புதுப்பிப்பு

இத்தாலி மற்றும் இலங்கைக்கு இடையில் சாரதி அனுமதிப்பத்திரங்களை பரஸ்பரம் அங்கீகரிப்பதற்கான இருதரப்பு ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இது தொடர்பான ஒப்பந்தம் நேற்று 12ஆம் திகதி இத்தாலியின் ரோம் நகரில் கையெழுத்திடப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கம் சார்பில் இத்தாலிக்கான இலங்கைத் தூதுவர் சத்யா ரொட்ரிகோவும், இத்தாலி அரசாங்கம் சார்பில் வெளிவிவகார மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு தொடர்பான பிரதி அமைச்சரும் அரச செயலாளருமான மரியா திரிபோடியும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

2021 ஆம் ஆண்டில் இந்த ஒப்பந்தம் காலாவதியாகியிருந்த நிலையில், அது முதல் இரு நாடுகளின் மோட்டார் வாகனப் போக்குவரத்து அதிகாரிகளுக்கிடையில் ஒப்பந்தத்தைப் புதுப்பிப்பது குறித்து இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் நிறைவுபெற்றதைத் தொடர்ந்து இக்கையெழுத்திடல் இடம்பெற்றுள்ளது.

இந்தச் சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தத்தின் மூலம், இரு நாடுகளிலும் நிரந்தர வதிவிடத்தைப் பெற்றுக்கொண்ட நபர்கள் தமது செல்லுபடியான சாரதி அனுமதிப்பத்திரத்தை மாற்றிக்கொள்ள அனுமதி வழங்கபட்டுள்ளது.

இந்த ஒப்பந்தம் முதன்முறையாக 2011 ஆம் ஆண்டு இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையில் கையெழுத்திடப்பட்டதோடு, 2021 இல் காலாவதியாவதற்கு முன்னதாக 2016 இல் புதுப்பிக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டதன் மூலம், குறித்த நாடுகளில் வசிக்கும் பிரஜைகள் 6 வருட காலப்பகுதிக்குள் எழுத்துமூல மற்றும் செய்முறைப் பரீட்சைகளுக்குத் தோற்றாமல் தமது சாரதி அனுமதிப்பத்திரத்தை மாற்றிக்கொள்ளும் வாய்ப்புக் கிட்டுவதோடு, இது இத்தாலியில் வசிக்கும் மற்றும் பணிபுரியும் இலங்கையர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.

5 வருட காலத்திற்குச் செல்லுபடியாகும் இந்த ஒப்பந்தம், இரு நாடுகளாலும் அங்கீகரிக்கப்பட்ட பின்னர் 60 நாட்களுக்குள் நடைமுறைக்கு வரும். ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்ததும் இரு தரப்பினரும் அது குறித்து அறிவிப்பார்கள் என வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு  தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!