வயல்நிலங்களில் குவிந்துள்ள மணல் மண்ணை அகற்ற மகாவலி அதிகாரசபை அனுமதி

‘டித்வா’ புயலினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு நிலைமையினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட வயல்நிலங்களில் குவிந்துள்ள மணல் மற்றும் மணல் கலந்த மண்ணை அகற்றுவதற்கான அனுமதியை மகாவலி அதிகார சபை ஏற்கனவே வழங்கியுள்ளதாக புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையைக் கருத்தில் கொண்டும், இப்பிரச்சினைக்குத் துரித தீர்வு காணும் நோக்கிலும், இலங்கை மகாவலி அதிகார சபைக்கு உட்பட்ட பொலன்னறுவை, திருகோணமலை, அம்பாறை, பதுளை, மட்டக்களப்பு, மாத்தளை, வவுனியா, முல்லைத்தீவு, அனுராதபுரம், குருநாகல் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள ஹுருலுவெவ, ரம்பக்கன் ஓயா மற்றும் அதனை அண்டிய வயல்நிலங்களில் படிந்துள்ள மணல் மற்றும் மணல் கலந்த மண்ணை இவ்வாறு அகற்றுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த பயிர்ச்செய்கை நிலங்கள் அல்லது காணி உரிமையாளரின் மேட்டு நிலம் அல்லது அனுமதி பெறப்பட்ட வேறொரு காணிக்கு இலகு ரக போக்குவரத்து முறையைப் பயன்படுத்தி அவற்றைக் கொண்டு சென்று, தேவையான விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடிய வகையில் அந்த நிலங்களை மீண்டும் தயார்படுத்திக்கொள்ள முடியும் என இதன் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மகாவலி அதிகார சபைக்குச் சொந்தமில்லாத ஏனைய பயிர்ச்செய்கை நிலங்களில் தேங்கியுள்ள மணல் மற்றும் மணல் கலந்த மண்ணை அகற்றி, அந்தப் பயிர்ச்செய்கை நிலத்தின் ஒரு பகுதியிலேயே களஞ்சியப்படுத்துவதற்கான அனுமதியை வழங்குமாறு பணியகம் பிராந்திய அகழ்வுப் பொறியியலாளர்களுக்கு ஏற்கனவே அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

மேலும், குறித்த விடயத்திற்கு அமைவாக எதிர்காலத்தில் அந்த இடங்கள் வர்த்தக நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்படுமாயின், அதற்கான முறையான அனுமதியை உரிய பணியகத்திடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!