மக்கள் ஆணை இல்லாமல். குறுக்கு வழியில் ஜனாதிபதியாக வந்த ஒருவர் முழு அதிகாரத்தையும் தன் கைக்குள் கொண்டுவரும் சூழ்ச்சிதான் தேர்தலை பிற்போட எடுக்கப்படும் நடவடிக்கை. இதற்கு எதிராக நாங்கள் திரண்டெழ வேண்டும் என்று இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் புதுக்குடியிருப்புப் பிரதே சபைக்கான வேட்பாளர் அறிமுகக்கூட்டம் முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் அவ்வாறு கூறினார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “தேர்தல் நடக்குமா, இல்லையா ? என்ற கேள்விக்கு மத்தியில் நாங்கள் பரப்புரை செய்கின்றோம். தேர்தல் நடக்க வேண்டும் : நடத்த வைப்போம். நாங்கள் தேர்தல் நடக்க வேண்டும் என்று மக்கள் மத்தியில் சொல்கின்றோம். தேர்தல் நடக்காமல் பிற்போடப்பட்டால் அந்தக் குள்ளநரித் தனத்தையும் வெளிக்கொண்டு வருவோம்.
மக்கள் தேர்தல் நடக்குமா என்று கேட்கின்றார்கள். ஜனாதிபதிக்கு தேர்தலைச் சந்திக்கப் பயம். இதன் காரணத்தால் தேர்தலை பிற்போடப் பார்க்கின்றார்கள். மாகாண சபைத் தேர்தலையும் பெரும் சூழ்சியால் காலவரையறையின்றிப் பிற்போட்டுவிட்டார்கள். 2019 ஆம் ஆண்டு மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்காக தனிநபர் சட்ட வரைபை நாடாளுமன்றத்தில் நான் சமர்ப்பித்தேன்.
இப்போது அவர்கள் என்ன செய்கின்றார்கள்? மாகாண அதிகாரமும் கிடையாது. உள்ளூராட்சி அதிகாரங்களையும் பாவிக்கவிடாமல் பறித்து எடுத்துவிட்டார்கள்.
மக்கள் ஆணை இல்லாமல். குறுக்குவழியில் ஜனாதிபதியாக வந்த ஒருவர் முழு அதிகாரத்தையும் தன் கைக்குள் கொண்டு வரும் சூழ்ச்சிதான் தேர்தலை பிற்போட எடுக்கப்படும் நடவடிக்கை. இதற்கு எதிராக நாங்கள் திரண்டெழ வேண்டும்.
இந்தத் தேர்தலின் முக்கியத்துவத்தை உணர்ந்த காரணத்தினால் தான் தேர்தலைப் பிற்போட முனைகின்றார்கள். தேர்தல் வந்தால் ஆட்சியில் இருப்பவர்களை மக்கள் தூக்கி கடாசி விட்டார்கள் என்பது தெட்டத்தெளிவாக தெரியவரும்” என்றார்.
