இந்தியா – இலங்கை உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், இந்திய அரசாங்கமும் மக்களும் வழங்கிய நன்கொடைகளுடன் கூடிய இந்திய விமானம் ஒன்று இன்று 29ஆம் திகதி அதிகாலை இலங்கையை வந்தடைந்துள்ளது.
இந்த நன்கொடையில் சுகாதாரப் பொருட் தொகுதிகள் அடங்குகின்ற நிலையில்அதனை இலங்கை விமானப்படை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுள்ளது.
இந்திய நிவாரணப் பொருட்களை ஏற்றிக்கொண்டு மற்றொரு விமானம் இன்று 29ஆம் திகதி முற்பகலில் இலங்கையை வந்தடையவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ள டிட்வா புயலில் தமது அன்புக்குரிய உறவுகளை இழந்த இலங்கை மக்களுக்கு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் அவர் தமது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளதாவது,
பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பாதுகாப்பு, ஆறுதல் மற்றும் துரித மீட்சிக்காக நான் பிரார்த்திக்கின்றேன்.
கடல்மார்க்கமாக மிகவும் நெருங்கிய அயலுறவுடன் எமது கூட்டொருமைப்பாட்டினை காண்பிக்கும் முகமாக சாகர் பந்து நடவடிக்கையின் கீழ் முக்கிய HADR உதவி மற்றும் நிவாரணப் பொருட்களை இந்தியா உடனடி அவசர உதவியாக அனுப்பி வைத்துள்ளது.
எவ்வாறான சூழலிலும் தேவையான மேலதிக ஆதரவு மற்றும் உதவிகளை வழங்க நாம் தயாராக உள்ளோம்.
இந்தியாவின் அயலுறவுக்கு முதலிடம் கொள்கை மற்றும் மஹாசாகர் தொலைநோக்கு ஆகியவற்றின் வழிகாட்டலுடன், உதவிகள் தேவைப்படும் எந்நேரத்திலும் இந்தியா இலங்கையுடன் தொடர்ந்து துணைநிற்கும் எனவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.
