பாடசாலை அதிபர் விளக்கமறியலில்

அநுராதபுரம் பிரதேசத்தில் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட பாடசாலை அதிபரை, எதிர்வரும் நவம்பர் மாதம் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு தம்புத்தேகம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 5 ஆம் திகதி, அநுராதபுரம் எப்பாவல பிரதேசத்தில் உள்ள ஒரு ஆரம்பப் பாடசாலையின் அதிபர், ஒரு கிலோவிற்கும் அதிகமான ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டார்.

எப்பாவல, நல்லமுதாவ வீதிப் பகுதியில் கைது செய்யப்பட்ட 30 வயதுடைய நபர் ஒருவரிடம் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், அநுராதபுரம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.

இதன்போது, குறித்த அதிபருக்குச் சொந்தமானது எனக் கூறப்படும் எப்பாவல, எதகல பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றின் பின்னால் புதைக்கப்பட்டிருந்த நிலையில், 1 கிலோ 185 கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த அதிபர் அருகில் உள்ள குளத்தில் போட்டுச் சென்ற போதைப்பொருளை அளக்கப் பயன்படுத்தப்படும் மின்னணுத் தராசு மற்றும் பொலித்தீன் சீலர் இயந்திரம் ஒன்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

இதற்கு மேலதிகமாக கைது செய்யப்பட்ட அதிபரின் மனைவி தேசிய மக்கள் சக்தியின் (NPP) பேலியகொட நகர சபையின் உறுப்பினராக இருப்பது பின்னர் தெரியவந்தது.

மேலும், குறித்த அதிபரின் மகனும் சுமார் ஒரு மாதத்திற்கு முன்னர் 25 கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

பின்னர், சட்டவிரோதச் செயலில் ஈடுபட்டமை காரணமாக, கைது செய்யப்பட்ட அதிபரை அவரது பதவியில் இருந்து இடைநிறுத்தம் செய்ய வட மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் தீர்மானித்திருந்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!