செம்மணி மனித புதைகுழி அகழ்வுக்கு 11.7 மில்லின் ரூபா நிதி ஒதுக்கீடு : இதுவரை 72 எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு!

வடக்கில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட, இலங்கையில் நான்காவது பெரிய மனித புதைகுழி வளாகத்தில் பத்து நாட்கள் இடைவேளைக்குப் பின்னர் மீண்டும் அகழ்வுப்பணிகள் ஆரம்பமாகியுள்ளன.

10 நாள் இடைவேளைக்குப் பின்னர் அகழ்வாய்வின் முதல் நாளில் மேலும் ஏழு எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக, பாதிக்கப்பட்டவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன்,  அகழ்வாய்வுத் தளத்தில் வைத்து திங்கட்கிழமை ( 21 ) ஊடகங்களிடம் தெரிவித்தார்.

“ அகழ்வில் முதலாவது ‘சைட் வன்’ புதைகுழியில் நான்கு மண்டையோட்டுத் தொகுதிகள் பகுதியளவில் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதேவேளை இரண்டாவது புதைகுழியில் 3 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டு மொத்தமாக 7 அடையாளம் காணப்பட்டுள்ளன.”

யாழ்ப்பாண பொலிஸாரினால் நடத்தப்பட்ட நீதித்துறை நடவடிக்கைகள் குற்றவியல் விசாரணை பிரிவுக்கு (CID) மாற்றப்பட்டுள்ளதாகவும் சட்டத்தரணி தெரிவித்தார்.

ஜூலை 10 ஆம் திகதி அகழ்வாய்வுக் குழுவினருக்கு ஓய்வு அளிக்க தற்காலிகமாக பணிகள் நிறுத்தப்பட்டபோது, 15 நாட்களாக தொடர்ந்த இரண்டாம் கட்ட அகழ்வுப் பணியில், செம்மணி சித்துப்பாத்தி இந்து மயான மனித புதைகுழியிலிருந்து 65 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டிருந்தன.

இதற்கமைய, குற்றப் பிரதேசமாக அறிவிக்கப்பட்ட செம்மணி மனித புதைகுழி வளாகத்தில் இருந்து இதுவரை 72 பேரின் எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

செம்மணி உள்ளிட்ட புதைகுழிகள் தொடர்பான விசாரணைகளை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு அரசாங்கம் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென ஐக்கிய நாடுகள் சபைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

“மனித புதைகுழிகளில் இருந்து எலும்புக்கூடுகளை தோண்டி எடுக்கவும், சாட்சிகளைப் பாதுகாக்கவும், பயனுள்ள விசாரணைகளை நடத்தவும், இறந்தவர்களை அடையாளம் காணவும் போதுமான நிதி ஒத்துழைப்பு, நிபுணத்துவம் மற்றும் தொழில்நுட்பத்தை வழங்கவும்” அரசாங்கத்திற்கு பரிந்துரைக்குமாறு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான ஐ.நா. குழுவிற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் அனுப்பி வைக்கப்பட்ட அண்மைய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செம்மணி அகழ்வுப் பணிக்காக 11.7 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ள விடயத்தை வெளிப்படுத்திய நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார “பணம் ஒரு பிரச்சினை அல்ல” என இந்தியாவின் தி இந்து ஊடகத்திடம் தெரிவித்திருந்தார்.

செம்மணி சித்துப்பாத்தி இந்து மயான மனித புதைகுழியில் மேலும் பல எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்படலாம் என ஆய்வாளர்கள் அச்சம் வெளியிட்டுள்ள நிலையில், ஆகஸ்ட் 6 ஆம் திகதி அகழ்வாய்வுத்தளத்தில் வழக்கு விசாரணையை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!