யாழ்ப்பாணத்துக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் உள்ளிட்ட நிகழ்வுகளில் கலந்து கொள்ள இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க யாழ்ப்பாணத்துக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
யாழ். மாவட்ட செயலகத்தில் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஜனாதிபதி கலந்து கொண்டிருந்த வேளை, வேலையற்ற பட்டதாரிகள் மாவட்ட செயலகத்துக்கு அருகில் தமக்கு வேலைவாய்ப்பு கோரி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்துக்குத் தடைவிதிக்கக் கோரி யாழ். நீதவான் நீதிமன்றில் யாழ்ப்பாணம் பொலீஸ் நிலையப் பொறுப்பதிகாரியினால் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்ட போதிலும், அமைதியாக போராட முடியும் எனச் சுட்டிக்காட்டிய நீதிமன்று தடைகோரிய மனுவை நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.