நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 24 மாவட்டங்களைச் சேர்ந்த 1 இலட்சத்து 32 ஆயிரத்து 110 குடும்பங்களைச் சேர்ந்த 4 இலட்சத்து 41 ஆயிரத்து 590 பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று வெள்ளிக்கிழமை காலை 06.00 மணிக்கு வெளியிட்ட நிலவர அறிக்கையின் படி, நாடு முழுவதும் பதிவுசெய்யப்பட்ட பல்வேறு அனர்த்தச் சம்பவங்களினால் 14 பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும், 20 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வெள்ள அனர்த்தம் காரணமாகத் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ள 12 ஆயிரத்து 348 குடும்பங்களைச் சேர்ந்த 38 ஆயிரத்து 616 பேர் 437 இடைத்தங்கல் முகாம்களிலும், 1 இலட்சத்து 15 ஆயிரத்து 319 பேர் உறவினர்களின் வீடுகளிலும் தங்கியுள்ளனர் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேநேரம், வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு அபாயம் முற்றாக நீங்காததனால் நாட்டின் பல பாகங்களுக்கும் பலவிதமான எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
வெள்ள அபாய எச்சரிக்கை
தெதுரு ஓயாவின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதனால் வாரியபொல, நிக்கவெரட்டிய, மாஹோ, கொபேகனே, பிங்கிரிய, பல்லம, சிலாபம், ஆராச்சிக்கட்டுவ மற்றும் ரஸ்நாயக்கபுர பிரதேசங்களில் உள்ள மக்கள் வெள்ளம் குறித்து அவதானமாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளது.
கலா ஓயா, மல்வத்து ஓயா, களனி ஆறு, ஹெடா ஓயா, மஹாவலி ஆறு மற்றும் முந்தேனி ஆறு ஆகியவற்றின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளதால் பல பகுதிகளுக்கு அம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நிலச்சரிவு எச்சரிக்கை
இன்று மாலை வரை அமலுக்கு வரும் வகையில் 09 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ளது. அதன்படி கண்டி, கேகாலை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் சில பகுதிகளில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பதுளை, கண்டி, கேகாலை மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு அம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பதுளை, கொழும்பு, கம்பஹா, கேகாலை, குருநாகல், நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மீட்பு நடவடிக்கைகளில் முப்படை
சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள அனர்த்தத்திலிருந்து நாட்டு மக்களை மீட்கும் நிவாரண நடவடிக்கைகளில் மூவாயிரத்து 183 முப்படை வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இரண்டாயிரத்து 80 இராணுவ அதிகாரிகள், 520 கடற்படையினர் , 540 விமானப்படையினர் மற்றும் 43 காவல்துறை அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று பாதுகாப்பு அமைச்சின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவசரத் தொடர்புகளுக்கு
அதேநேரம் பேரிடர் அவசரநிலைகளின் போது உதவி தேவைப்படுவோர் பின்வரும் 117, 0112 136 222 / 0112 670 002 ஆகிய அவசர தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
மேலும், 011-2027148, 011-2472757, 011-2430912, 011-2013051, 011-2013051 அல்லது 107 ஆகிய 24 மணி நேரமும் செயல்படும் பொலீஸ் அவசர அழைப்புத் தொலைபேசி இலக்கங்களுடன் மக்கள் தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.