ஊழலில் ஈடுபட்டவர்கள் மற்றும் குற்றவாளிகள் அம்பலப்படுத்தப்படுவர் – அக்கிராசன உரையில் ஜனாதிபதி தெரிவிப்பு!

“சர்ச்சைக்குரிய வகையில் புரியப்பட்ட குற்றங்கள், அதற்கு காரணமானவர்கள் அம்பலப்படுத்தப்பட்டு, அவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படும் என்று நாங்கள் உறுதியளிக்கிறோம். சட்டத்தையும் நீதியையும் பேணிப் பாதுகாக்கும் ஒரு அரசே நமக்குத் தேவை” என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தை வெளிப்படுத்தும் அக்கிராசன உரையை நிகழ்த்திய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் இலங்கை ஒரு ஜனநாயக நாடு என்ற வகையில் தனியொரு கட்சி நாட்டை ஆள வேண்டும் என்று ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது.எம் மீதும் அரசாங்கத்தின் மீதும் நம்பிக்கை வைத்துள்ள அனைத்து மக்களுக்கும் நன்றி என்றும் அவர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய அக்கிராசன உரையில் அவர் 11 முக்கியமான அம்சங்களைக் குறிப்பிட்டுக் காட்டியுள்ளார். ஜனாதிபதியின் உரையில் குறிப்பிடப்பட்ட முக்கிய அம்சங்க

1. அரசாங்கத்தின் இடைக்கால வரவு செலவுத் திட்டம் அடுத்த மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சமர்ப்பிக்கப்படும்.

2. அடுத்த வருட வரவு செலவுத் திட்டத்தின் மூலம், ஊழியர்களின் சம்பளம் மற்றும் அரசாங்க அஸ்வெசுமா சமூக நலத்திட்டத்தின் கொடுப்பனவு ஆகியவற்றை அரசாங்கம் அதிகரிக்கவுள்ளது.

3. பாடசாலை மாணவர்கள் கற்றல் உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்கான கொடுப்பனவுகளை அரசாங்கம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்படும்.

4. தகவல் தொழில் நுட்பம் மூலமான வருமானத்தை ஆண்டுக்கு 5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்த்தும் நோக்கத்தில் தகவல் தொழில் நுட்ப துறை சார் பணியாளர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சமாக ஆக அதிகரிக்கப்படும்.

5. சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) வெளிநாட்டு நிதி வசதி (EFF) தொடர்பான மூன்றாவது ஒப்பந்தத்தில் எதிர்வரும் 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கையெழுத்திடப்படவுள்ளது.

6. இலங்கையில் இனவாத அரசியலுக்கோ அல்லது மதத் தீவிரவாதத்துக்கோ மீண்டும் இடமில்லை.

7. பொருளாதார நன்மைகள் மக்களுக்கு நியாயமான முறையில் பகிரப்பட வேண்டும். சந்தை வாய்ப்புகளில் காணப்படும் ஏகபோகங்கள் இல்லாதொழிக்கப்படும்.

8. மக்களின் நலனுக்காக வினைத்திறன்மிக்க அரச சேவையொன்று உருவாக்கப்படும்.

9. அரசியல்வாதிகள், நிறைவேற்று அதிகாரிகள் உட்பட அனைவரும் சட்டத்திற்கு அமைய செயற்பட வேண்டும்.

10. ஊழலில் ஈடுபட்டவர்கள் மற்றும் குற்றவாளிகள் சட்டத்தின்படி தண்டிக்கப்படுவார்கள். ஊழலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும்.

11. தூய இலங்கை வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்காக செயலணியொன்று உருவாக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!