உள்ளூராட்சித் தேர்தலைப் பிற்போட ஒருபோதும் இடமளிக்க முடியாது. மார்ச் மாதம் 09 ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படும். மக்கள் அரசியலைப் புறக்கணித்தால் ஊழல்,மோசடியாளர்கள் தான் தொடர்ந்தும் ஆட்சியில் இருப்பார்கள். நாட்டு மக்கள் தேர்தலுக்கு தயாராக வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா தெரிவித்தார்.
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கும், அரசியல் கட்சி கட்சிகளின் செயலாளர்கள, பிரதிநிதிகள் மற்றும் சுயாதீன குழுக்களின் பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பொன்று நேற்று செவ்வாய்க்கிழமை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், தேர்தல் செலவீனம் தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை சாதகமாக உள்ளது. தேர்தலை எதாவது ஒரு வழிமுறையில் பிற்போட அரசாங்கம் சூழ்ச்சி செய்து வருகின்ற நிலையில் தேர்தலை நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு சிறந்த தீர்மானங்களை எடுத்துள்ளமை மகிழ்ச்சிக்குரியது.
தேர்தலைப் பிற்போடும் அரசாங்கத்தின் முயற்சிக்கு எதிர்க்கட்சிகளும், தேர்தல்கள் ஆணைக்குழுவும் தடையாக உள்ளமை அரசாங்கத்திற்கு பாரிய சவாலாக உள்ளது.ஆகவே தேர்தலை பிற்போட எக்காரணங்கொண்டும் இடமளிக்க முடியாது.
தேர்தலைப் பிற்போட்டு,பலவந்தமான முறையில் அதிகாரத்தில் இருக்கும் பழக்கம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு உண்டு. முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவின் கொள்கைகளையே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பின்பற்றுகிறார். பலவீனமான அரச தலைவரின் குறுகிய நோக்கத்துக்காக மக்களின் ஜனநாயக உரிமையை விட்டுக் கொடுக்க முடியாது.
நாட்டு மக்கள் அரசியலை புறக்கணித்தால் ஊழல் மோசடியார்கள் தொடர்ந்து ஆட்சி செய்வார்கள். நாட்டு மக்களின் கருத்துகளுக்கு மதிப்பளிக்காமல் அரசாங்கம் தான்தோன்றித்தனமாகச் செயற்படுகிறது. இடம்பெறவுள்ள உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் மக்கள் அரசாங்கத்தைப் புறக்கணிக்க வேண்டும்.
உள்ளுராட்சித் தேர்தல் பெறுபேறுகள் அடுத்தக்கட்ட அரசியல் தீர்மானத்திற்கு வழி வகுக்கும்.தேர்தலை பிற்போட்டால் ஏற்படும் விளைவுகள் பாரதூரமானதாக இருக்கும் என்பதை அரசாங்கம் “அரகயல” போன்ற சம்பங்கள் ஊடாக மீட்டிப் பார்க்க வேண்டும் என்றார்.