சிவனொளிபாதமலைக்கு தரிசனம் செய்யச்சென்ற இளைஞர் மலையிலிருந்து விழுந்து காணாமல் போயிருந்த நிலையில், 5 நாட்களின் பின்னர் நேற்றைய தினம் மயக்கமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
சிவனொளிபாதமலைக்கு தரிசனம் செய்ய கடந்த 19ஆம் திகதி மகர சூரியவேவ பகுதியில் இருந்து இரண்டு பெண்களுடன் வந்த 33 வயதுடைய தினேஷ் ஹேமாந்த என்ற இளைஞர் தரிசனம் செய்துவிட்டுத் திரும்பும் வழியில் மலையிலிருந்து விழுந்துள்ளார்.
குறித்த நபர் தவறி விழுந்துவிட்டதாக அவருடன் வந்த பெண்கள் சிவனடி பாத மலை காவல் நிலையத்தில் புகாரளித்திருந்தனர்.
அதனடிப்படையில் இராணுவம் மற்றும் விசேடஅதிரடி படையினர் தேடுதல் நடத்தியும் அவர் கிடைக்கவில்லை.
இந்தநிலையில் சிவனடிபாத மலைக்கு அருகில் உள்ள மறே தோட்ட ராஜமலை பிரிவில் உள்ள தொழிலாளர்கள் நேற்று மாலை குறித்த நபரை மயக்கம் அடைந்திருந்த நிலையில் கண்டுபிடித்ததுடன் நல்லதண்ணி பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்தனர்.
நல்லதண்ணிய பொலிஸ் நிலைய மேலதிக பொலிஸ் அதிகாரி எஸ்.ஐ.பண்டர தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தோட்ட தொழிலாளர்கள் உதவியுடன் அந்த நபரை மீட்டுள்ளனர்.
சம்பந்தப்பட்ட நபர் நல்லதண்ணி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு சிகிச்சைக்காக மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தனக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை என குறித்த நபர் பொலிஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார். இவர் மலையிலிருந்து பாதுகாப்பு வேலியை கடந்து கீழே விழும் சிசிரிவி காட்சிகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.