தமிழர் தரப்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது சாத்தியம் இல்லை!

தமிழ் கட்சிகள் மற்றும் அரசியல் அனுபவம் வாய்ந்தவர்கள், ஒன்றிணைந்து ஜனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது சாத்தியம் இல்லை என்ற முடிவினை எடுப்பார்கள் எனத் தான் எண்ணுவதாக என கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் கே.கே.மஸ்தான் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” என்னை பொறுத்தவரை ஜனாதிபதி தேர்தலுக்கான தமிழ் தரப்பிலான பொது வேட்பாளர் நிறுத்தப்பட்டு வெற்றி அடைவார் என்றால் பரவாயில்லை.

ஆனால் ஜனாதிபதித்  தேர்தலினைப் பொறுத்த வரை தேசியக் கட்சியைச் சார்ந்த ஒருவரே வெற்றி பெறுவார். எங்களை பொறுத்தவரை நாங்கள் ஆதரிக்கின்ற ஜனாதிபதியை வெற்றி அடைய வைப்பதற்கான முயற்சிகளை நாங்கள் எடுப்போம். மேலும் தமிழ் தரப்பில் பொது வேட்பாளர் என்ற விடயம் என்பது எந்த விதத்தில் சாத்தியமானது என்பது எமக்குத் தெரியவில்லை.

கடந்த காலங்களில் ஏதோவொரு பிரதான வேட்பாளர்கள் ஒருவரையே ஆதரித்துள்ளனர். அதுவே சரியானதாக அமையும் என நான் எண்ணுகின்றேன். ஒருமித்த கருத்துடன் ஒரு ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவு செய்வதன் மூலம் வெற்றியை நோக்கி செல்வதாக இருந்தால் பரவாயில்லை ஆனால் அது சாத்தியமில்லை.

எனவே தமிழர் தரப்பில் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்ற முயற்சி ஏன் ஏற்பட்டுள்ளது என்பது புரியவில்லை. மேலும் தமிழ் கட்சிகள் மற்றும் அரசியல் அனுபவம் வாய்ந்தவர்கள் புத்திஜீவிகள் என எல்லோரும் ஒன்றிணைந்து ஜனாதிபதி தேர்தலுக்கான தமிழர் தரப்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது சாத்தியம் இல்லை என்ற முடிவினை எடுப்பார்கள் என எண்ணுகின்றேன்” இவ்வாறு இராஜாங்க அமைச்சர் கே.கே.மஸ்தான் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!