சுமந்திரன் தாக்கல் செய்த மனுவை நிராகரிக்குமாறு சட்டமா அதிபர் கோரிக்கை!

இணைய பாதுகாப்பு சட்டத்துக்கு எதிராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.  சுமந்திரன் தாக்கல் செய்த மனுவை விசாரணை செய்யாமலேயே நிராகரிக்குமாறு சட்டமா அதிபர்,  உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இணைய பாதுகாப்பு சட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனு உயர் நீதிமன்றில் நேற்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம் இந்த கோரிக்கையை விடுத்திருந்தார்.

பிரியந்த ஜயவர்தன, ஷிரான் குணரத்ன மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகியோர் மூவர் அடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் முன்னிலையில் இந்த மனு பரிசீலிக்கப்பட்டது.

தற்போது இந்த சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, சபாநாயகராலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளமையால், இதில் தலையிட உயர் நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என சட்டமா அதிபர் மன்றில் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்புச் சட்டத்தின் 126 ஆவது பிரிவின்படி, நிர்வாகம் அல்லது நிறைவேற்றுத்துறையின் நடவடிக்கையால் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டால் மட்டுமே அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்ய முடியும் என்றும் மன்றில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

அதன்படி, அரசியலமைப்புடன் தொடர்புடைய பிரிவின் கீழ் ஒரு மனுவை சமர்ப்பிக்க எந்த சட்ட ஏற்பாடும் இல்லை என்பதுடன், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இவ்வாறு மனு தாக்கல் செய்வது சட்டத்திற்கு முரணானது எனவும் சட்டமா அதிபர் குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!