தலைமை உட்பட அனைத்துப் பதவிகளுக்கான தெரிவுகளையும் மீள நடத்த தயார்..! – சிறீதரன் அறிவிப்பு

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவி உட்பட கட்சியின் அனைத்துப் பதவிகளுக்கான புதிய தெரிவுகளை மீள நடத்துவதற்கு தயாராக உள்ளேன் என அக் கட்சியின் புதிய தலைவர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

75வருட கால அரசியல் பாரம்பரியத்தினைக் கொண்ட தமிழரசுக்கட்சிக்கு எதிராக தற்போது வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன.

ஆகவே தொடுக்கப்பட்ட வழக்குகள் தொடர்பில் நீதிமன்றத்தின் ஊடாக கட்சி அதனை முறையாக கையாளுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

அதேநேரம், கட்சியின் நிர்வாகம் தொடர்பில் புதிய தெரிவுகள் இடம்பெற்றுள்ளமையானது யாப்பு விதிகளுக்கு முரணானது என்றும் கூறப்பட்டுள்ளது.

என்னைப்பொறுத்தவரையில், எனது தலைமைத் தெரிவு உட்பட கட்சியின் அனைத்து பதவி நிலைகளுக்கான புதிய தெரிவுகளையும் மீளவும் செய்வதற்கு நான் தயாராகவே உள்ளேன்.

மேலும், தற்போது புதிய தெரிவுகள் சம்பந்தமான விடயங்கள் நீதிமன்றத்தின் தீர்ப்பிலேயே தங்கியுள்ளன. ஆகவே நீதிமன்றத்தின் தீர்மானித்தினைப் பின்பற்றுவதற்கும் நான் தயாராக உள்ளேன்.

விசேடமாக, நீதிமன்றம் தெரிவுகள் தவறாக இருக்கின்றன என்று தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டுமாக இருந்தால் நீதிமன்றத்தின் மேற்பார்வையுடன் அதனை மீளச் செய்வதில் எமக்கு எந்தப்பிரச்சினையும் இல்லை.

எவ்வாறானினும், இலங்கைத் தமிழரசுக்கட்சிக்குள்ளும், எதிராகவும் பல சூழ்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. அந்த சூழ்ச்சிகள் பற்றி புரிதல்களும் எமக்கு தெளிவாக உள்ளன. என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!