ஐக்கிய மக்கள் சக்தியினர் மீது கண்ணீர்ப்புகைத் தாக்குதல்!

வட் வரி விதிப்பு உள்ளிட்ட அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பினை தெரிவித்து, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியினால் இன்று (செவ்வாய்கிழமை) கொழும்பில் பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

குறித்த போராட்டம் வட் வரி அதிகரிப்பு, மருந்து பற்றாக்குறை, அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் உள்ளிட்ட அரசாங்கத்தின் நடவடிக்கைகளினால் ஒட்டுமொத்த மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இவற்றுக்கு எதிர்ப்பினை வெளியிட்டு, இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கொழும்பு, நகரமண்டபத்திற்கு முன்பாக ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்டப் போரணியில், நாடளாவிய ரீதியாக இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

போராட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரன்ஜித் மத்துமபண்டார, நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.எம்.மரிக்கார், ஹர்ஷன ராஜகருணா மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான முஜிபூர் ரஹ்மான், ஹிருணிகா பிரேமசந்திர உள்ளிட்ட கட்சியின் ஆதரவாளர்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, கொழும்பு புறநகர் பகுதிகளிலும் ஐக்கிய மக்கள் சக்தியினால் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

ஏற்கனவே எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கியமான 16 உறுப்பினர்களுக்கு எதிராக நீதிமன்றம் இன்று தடை உத்தரவினை பிறப்பித்திருந்தது.

குறிப்பாக மாளிகாவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முஸ்லிம் பொது மையவாடி தொடக்கம் பிரதீபா மாவத்தை, சத்தர்ம மாவத்தை, ஜயந்த வீரசேகர மாவத்தை, மில்டன் பெரேரா மாவத்தை, ஜும்மா சந்தி ஊடாக சங்கராஜ மாவத்தை வரையான பகுதிகளுக்கு இடையூறு ஏற்படும் வகையில் செயற்படுவதற்கு இவர்களுக்கு நீதிமன்றம் தடை விதித்திருந்தது. இந்த நிலையிலேயே இந்தப் போராட்டம் இன்று நடைபெற்றது.

எதிர்ப்புப் பேரணியானது நகரசபை மண்டபத்திலிருந்து முன்னோக்கி சென்ற நிலையில், பொது நூலகத்திற்கு முன்பாக பொலிஸார் தடைகளை ஏற்படுத்தியும், நீர்த்தாரைப் பிரயோக வாகனங்களைக் கொண்டும் பேரணியை முன்னோக்கி நகராமல் தடுக்க முற்பட்டனர்.

எனினும், போராட்டக்காரர்கள் முன்னோக்கி நகர முற்பட்டபோது, பாதுகாப்புத் தரப்பினரால் கண்ணீர்ப்புகைத் தாக்குதல் நடத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!