யாழ். நகரப்பகுதியில் கட்டண மீற்றர் பொருத்தாத முச்சக்கர வண்டிகள் சேவையில் ஈடுபட முடியாதவாறு பொலீஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இன்று காலை முதல் பொலீஸார் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
யாழ். நகரப்பகுதியில் சேவையில் ஈடுபடும் முச்சக்கரவண்டிச் சாரதிகள் தத்தமது எண்ணப்படி கட்டண வசூலிப்பில் ஈடுபட்டு வருவதாகப் பல்வேறு தரப்பினராலும் குற்றஞ்சாட்டப்பட்டு வந்தது. அதனடிப்படையில் யாழ் மாவட்டத்தில் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதியிலிருந்து கட்டண மீற்றர் பொருத்தாக முச்சக்கர வண்டிகள் சேவையில் ஈடுபட அனுமதிக்கப்படமாட்டாது என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரன் அறிவித்திருந்தார்.
இந்நிலையிலேயே, யாழ் நகர்ப் பகுதி முச்சக்கர வண்டித் தரிப்பிடத்தில் இருந்து கட்டண மீற்றர் பொருத்தாமல் சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளை அகற்றும் நடவடிக்கைகளை யாழ்ப்பாணப் போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்தனர்.