சீனாவின் பெற்றோலிய உற்பத்திகள் விற்பனை நிறுவனமான “சினோபெக்” நிறுவனம் இலங்கையில் சினோபெக் எரிபொருள் நிரப்பு நிலையங்களை அமைப்பதற்கும், எரிபொருள் விற்பனையில் ஈடுபடுவதற்குமான ஒப்பந்தங்கள் அடுத்த மாத நடுப்பகுதியில் கைச்சாத்திடப்படும் என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இலங்கையில் சில்லறை எரிபொருள் விற்பனைக்கான ஒப்பந்தங்களை மேற்கொள்ளவும், அதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிக்கவும் சினோபெக் நிறுவன அதிகாரிகள் குழுவொன்று இலங்கை வந்துள்ளது என்று அவர் தனது ரூவிற்றர் தளத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.
இலங்கை வந்துள்ள சீனாவின் சினோபெக் நிறுவனத்தின் அதிகாரிகள் குழுவொன்றுக்கும், அமைச்சர் கஞ்சன விஜேசேகரவுக்கும் இடையில் எரிசக்தி அமைச்சில் நேற்று செவ்வாய்க் கிழமை சந்திப்பொன்று இடம்பெற்றது. இந்த சந்திப்பில் சில்லறை எரிபொருள் விற்பனைக்கான ஒப்பந்தங்களை இறுதி செய்வதற்கும், விற்பனை நடவடிக்கைகளைத் தொடங்குவது தொடர்பிலும் அதற்கான காலக்கெடு, தொடர்புடைய ஒப்பந்தத்தின் நிபந்தனைகள் மற்றும் ஏனைய ஏற்பாடுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
அதற்கமைய, சினோபெக் நிறுவனம் மே மாதத்தின் நடுப்பகுதியில் ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் என்றும், இலங்கையில் அதன் விற்பனை செயல்பாடுகள், அன்றிலிருந்து 45 நாட்களுக்குத் தொடங்கும் என்றும் முடிவு செய்யப்பட்டது.
இந்த சந்திப்பில் அமைச்சின் அதிகாரிகள், இலங்கை மத்திய வங்கி , முதலீட்டுச் சபை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனைய நிறுவனம் ஆகியவற்றின் அதிகாரிகளும் கலந்துகொண்டதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது ட்விட்டர் பதிவில் மேலும் தெரிவித்துள்ளார்.