திட்டமிட்டபடி மார்ச் ஒன்பதாம் திகதி உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது சாத்தியமற்ற விடயம் என்று தேர்தல்கள் ஆணைக்குழு உயர் நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளது.
2023 இல் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கான சட்டங்களின் அடிப்படையில் அதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழு நீதிமன்றத்திற்கு தெரிவித்திருந்ததுடன், தேர்தல் சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டிருந்தது.
எனினும், இந்த வாக்குறுதியின் பின்னர் தேர்தல் ஆணைக்குழு உரிய நடவடிக்கைகளை எடுப்பதை தடுக்கக் கூடிய சூழ்நிலைகள் உருவாகியுள்ளன. இந்த சூழ்நிலைகள் தேர்தல் ஆணைக்குழுவின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டவை எனவும் ஆணைக்குழு நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளது.
தேர்தலை நடத்துவதற்கான நிதியை வழங்க முடியாது என திறைசேரியின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார் எனவும், அரச அச்சக திணைக்களத்துக்கு முன்கூட்டியே 410 மில்லியனை வழங்காவிட்டால் தன்னால் தேர்தலுக்கான வாக்குசீட்டுகளை வழங்க முடியாது என அரச அச்சகர் தெரிவித்துள்ளார் எனவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும், வாக்குசீட்டுகளை அச்சடிக்கும் பணிக்குப் பாதுகாப்பு வழங்க பொலிஸ்மா அதிபர் தவறியுள்ளார் எனவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்கு அவசியமான எரிபொருள், வாகனம் உட்பட ஏனைய வசதிகளை வழங்குமாறு தேர்தல் ஆணைக்குழு கேட்டுக்கொண்ட போதிலும் இந்த வேண்டுகோள்கள் நிறைவேற்றப்படவில்லை. திறைசேரி, அரச அச்சகர், பொலிஸ்மா அதிபர் போன்றவர்கள் உரிய உதவிகளை வழங்கவில்லை எனவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.