கட்டட அனுமதி ஒன்றுக்காக ரூபா இரண்டு மில்லியன் கையூட்டாகப் பெற்றார் என்ற சந்தேகத்தின் பேரில், விசாரணைகள் முடிவடையும் வரை மாவனெல்ல பிரதேச சபைத் தலைவர் நோயல் ஸ்ரிவன் தற்காலிகமாகப் பதவி நீக்கப்பட்டுள்ளார். சப்ரகமுவ மாகாண ஆளுநர் ரிக்கிரி கொப்பேகடுவ விசேட வர்தமானி அறிவித்தல் மூலம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். விசாரணைகள் முடிவடையும் வரை மாவனெல்ல பிரதேச சபையின் உப தவிசாளர் கோரலே கெதர பியதிஸ்ஸவைப் பதில் தவிசாளராக நியமனம் செய்வதாகவும் வர்த்தமானி அறிவித்தலில் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுஜன பெரமுனவின் உறுப்பினரான நோயல் ஸ்ரிவன் கடந்த மாதம் 13 ஆம் திகதி, மாவனெல்ல பிரதேசத்திலுள்ள பிரபல வர்த்தகர் ஒருவரிடமிருந்து கட்டட அனுமதிக்காக ரூபா இரண்டு மில்லியன் பணத்தைப் பெற்றுக் கொண்ட போதே இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அவரை கைது செய்தது. கைது செய்யப்பட்டமை தொடர்பில், இலஞ்ச ஊழல் ஆணைக்குழு, சப்ரகமுவ மாகாண ஆளுநருக்குத் தெரியப்படுத்தியிருந்தது.
பிரதேச சபைத் தவிசாளரைப் பதவி நீக்கம் செய்யும் வர்தமானி அறிவித்தலில் கையூட்டுப் பெற்ற சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ரோஹன அனுரகுமாரவை நியமித்திருப்பதாகவும் ஆளுநர் அறிவித்துள்ளார்.