ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல்

கமத்தொழில், கால்நடை வளங்கள் மற்றும் நீர்ப்பாசனத் துறைக்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் மற்றும் அவற்றை மீளக் கட்டியெழுப்ப எடுக்க வேண்டிய துரித நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்கான கலந்துரையாடல், நேற்று 4ஆம் திகதி ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் விவசாய அமைச்சு மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகளின் பங்கேற்புடன் இடம்பெற்றுள்ளது.

நாட்டை பாதித்த சீரற்ற காலநிலை காரணமாக நெல், சோளம், தானியங்கள் மற்றும் மரக்கறி பயிர்ச் செய்கைகளுக்கு ஏற்பட்டுள்ள சேதம் தொடர்பில் கிடைத்துள்ள தரவுகள் மற்றும் சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கான இழப்பீடு வழங்கும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துவது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டன.

கால்நடைகள் மற்றும் நீர்ப்பாசனத் துறைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டதுடன், நீர்ப்பாசனக் கட்டமைக்கு ஏற்பட்டுள்ள சேதங்களை மதிப்பிட்டு, அவற்றை விரைவில் மீளக்கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதற்கான வேலைத்திட்டங்களைத் தயாரிக்குமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால் காந்த, கமத்தொழில், கால்நடை வளங்கள் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன, காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் அரவிந்த செனரத், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் கபில ஜனக பண்டார, கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் டி.பி. விக்ரமசிங்க, விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டபிள்யூ.ஏ.ஆர்.டி. விக்ரமராச்சி, நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கித்சிறி வெலிகெபொல, கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி கே.கே. சரத் உள்ளிட்ட அரச அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!