காதலன் வீட்டில் நகை திருடிய யுவதி கைது

யாழ், சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பழைய பொலிஸ் நிலைய வீதியில் உள்ள காதலனின் வீட்டிலிருந்து நகைகளைத் திருடிய குற்றச்சாட்டில், கிளிநொச்சியைச் சேர்ந்த இளம் யுவதி ஒருவர் சாவகச்சேரி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சாவகச்சேரியைச் சேர்ந்த இளைஞரும், கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த யுவதியும் காதலித்து வந்த நிலையில், இருவருக்கும் திருமண நாள் குறிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக காதலி காதலனின் வீட்டில் தங்கியிருந்தார்.

இவ்வாறிருக்க, கடந்த 5 ஆம் திகதி காதலனின் தாயார் வைத்திருந்த தாலிக்கொடி உட்பட சுமார் 8 பவுண் எடை கொண்ட தங்க நகைகள் காணாமல் போனதாக, 17 ஆம் திகதி காதலனின் தாயாரால் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, சாவகச்சேரி பொலிஸ் குற்றத்தடுப்பு மற்றும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸ் உப பரிசோதகர் மயூரன் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட விசாரணையில், கிளிநொச்சியிலிருந்து வந்து காதலன் வீட்டில் தங்கியிருந்த யுவதியே நகைகளைத் திருடியது தெரியவந்த நிலையில்,நேற்று முன்தினம் இரவு அவர் கைதுசெய்யப்பட்டார்.

விசாரணையில் அவர் அளித்த வாக்குமூலத்தில் தாலிக்கொடியை சாவகச்சேரியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்ததாகவும், மீதமுள்ள நகைகளை யாழ்ப்பாணத்தில் விற்பனை செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் டிக்டொக் சமூக வலைத்தளத்தில் தொடர்பு கொண்ட ஒரு நபரின் ஆலோசனையில் இணையவழி முதலீட்டுத் திட்டத்தில் ஈடுபட்டு வந்ததும், இதுவரை 27 இலட்சம் ரூபாய் செலுத்தியதும், மேலும் பணம் செலுத்துவதற்காகவே காதலன் வீட்டில் நகை திருடியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதேபோன்று அண்மைக் காலமாக இணைய மோசடியில் ஈர்க்கப்பட்டு, சொந்த நகைகளை விற்றும், திருட்டுப் போய்விட்டதாக பொய் முறைப்பாடு அளித்தும் பல சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

 

 

எனவே, பொதுமக்கள், குறிப்பாக இளைஞர்கள் மற்றும் யுவதிகள் இணையவழி முதலீடு, வருமானம் தரும் திட்டங்கள் என்ற பெயரில் வரும் மோசடிகளில் அவதானமாக இருக்குமாறு சாவகச்சேரி பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!