குடும்ப சுகாதார சேவையில் தற்போது எழுந்துள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக விசேட தொழில்நுட்பக்குழு ஒன்றை நியமிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், அக்குழு விடயங்களை ஆராய்ந்து அளிக்கும் பரிந்துரைகள் மற்றும் அளவுகோல்களின் அடிப்படையில் அந்தப் பிரச்சினைகள் உடனடியாகத் தீர்க்கப்படும் என சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹசங்க விஜேமுனி தெரிவித்துள்ளார்.
குடும்ப சுகாதார சேவையில் தற்போது எழுந்துள்ள பிரச்சினைகளைத் தீர்க்கும் நோக்கில், அகில இலங்கை குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்கள் சங்கப் பிரதிநிதிகளுடன் நேற்று 10 ஆம் திகதி பிற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதி அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
குடும்ப சுகாதார சேவைப் பயிற்சியை 3 வருடங்களாக நீடித்தல், குடும்ப சுகாதார சேவையைத் தனிப்பட்ட சேவையாக மாற்றுதல், குடும்ப சுகாதார சேவைப் பயிற்சிப் பாடசாலைகளை நிறுவுதல் மற்றும் மேலதிக நேர கொடுப்பனவுகள் மற்றும் பயணக் கொடுப்பனவுகள் வழங்குதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இக்கலந்துரையாடலில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.
மேலும், சங்கப் பிரதிநிதிகள் தங்களைப் பாதிக்கும் ஏனைய தொழில்சார் பிரச்சினைகள் குறித்தும், தமது சேவைக் கடமைகளைச் செய்வதில் சவாலாக இருக்கும் மனித மற்றும் பௌதீக வளங்கள் தொடர்பான பல விடயங்கள் குறித்தும், குடும்ப சுகாதார சேவையில் சிறந்த தரத்தைப் பேணுவதற்கான தமது சங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் யோசனைகள் குறித்தும் பிரதி அமைச்சருடன் விரிவாகக் கலந்துரையாடல் இடம்பெற்ருள்ளது.
பிரதி அமைச்சர், உடனடியாகத் தீர்க்கக்கூடிய பிரச்சினைகளுக்கு அதிகாரிகளுடன் கலந்துரையாடி அதே நேரத்தில் தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுத்தார். அத்துடன், மேலும் பல விடயங்களுக்கு விரைவாகத் தீர்வுகளை வழங்கக்கூடிய சாத்தியக்கூறுகள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.
