இந்தியாவில் (India) பாரிய தீ விபத்து சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த சம்பவம் நேற்று (20) இந்தியாவின் ஜெய்ப்பூரில் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் 11 பேர் வரை உயிரிழந்துள்ளதுடன் 40 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், “காலை 5.30 மணி அளவில் எரிபொருள் நிலையம் அருகே நிறுத்தப்பட்டிருந்த லொறி ஒன்று, சிஎன்ஜி தாங்கி வாகனங்கள் மீது மோதியதில் தீப்பிடித்துள்ளது.
இதன்போது, எரிபொருள் தாங்கிகள் வெடிப்புக்குள்ளானதால் தீ பாரியளவில் பற்றியுள்ளது.
விபத்தின் போது எழுந்த சத்தமானது, சுமார் பத்து கிலோமீற்றர் தூரம் வரை கேட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, தீயை அணைத்து காயமடைந்தவர்களை மீட்பதற்கான மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், 28 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சம்பவத்தில் மோதிய லொறியில் ஆபத்தான இரசாயனம் இருந்ததாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.