யாழ். மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாகப் பாதிப்படைந்து தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறியவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள 68 இடத்தங்கல் முகாம்களிலும் இடைத்தங்கல் முகாங்களை அகற்றும் வரை வைத்திய சேவைகள் யாழ் போதனா வைத்தியசாலையால் மேற்கொள்ளப்பட உள்ளன.
அதன் முதற்கட்டமாக, வெள்ள அனர்த்த நிலைமை காரணமாகத் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறி யாழ் இந்து மகளிர் ஆரம்ப பாடசாலை இடைத்தங்கள் முகாமில் தங்கி உள்ள மக்களுக்கு இன்று நடமாடும் மருத்துவமுகாம் மூலம் சேவை வழங்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் முன்னாள் பிரதிப் பணிப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமாகிய மருத்துவர் எஸ். ஸ்ரீ பவானந்தராஜா இன்று யாழ் இந்து மகளிர் ஆரம்ப பாடசாலை இடைத்தங்கள் முகாமுக்கு விஜயம் செய்து நடமாடும் மருத்துவ முகாமை ஆரம்பித்து வைத்தார்
இதன்போது, யாழ் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ. கேதீஸ்வரன், யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் த. சத்தியமூர்த்தி மற்றும் யாழ். போதனா வைத்தியசாலை மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.
கந்தர்மடம் வட கிழக்கு கிராம சேவையாளர் பிரிவை சேர்ந்த 53 குடும்பங்களைச் சேர்ந்த 141 பேர் யாழ் இந்து மகளிர் ஆரம்பப் பாடசாலை இடைத்தங்கள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.