சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்வதற்கு முனைந்த போது மனிதக் கடத்தலுக்கு ஆளாகி மியன்மாரில் சிக்கித்தவித்த 08 பெண்கள் உட்பட 32 இலங்கையர்கள் இன்று மீட்கப்பட்டுள்ளனர்.
இணையவழி ஆட்கடத்தல் விளம்பம்பரங்களை நம்பி போலி முகவர்களுக்கூடாகச் சட்ட விரோதமாக வெளிநாடுகளுக்குப் புலம்பெயர முயன்று, ஏமாற்றப்பட்டவர்களே வெற்றிகரமான, ஒருங்கிணைந்த செயல்முறையைத் தொடர்ந்து மீட்கப்பட்டுள்ளனர் என்று வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
வெளிவிவகார அமைச்சு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா பணியகம் மற்றும் மியான்மரில் உள்ள இலங்கை தூதரகம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியினாலும், நிர்க்கதியாக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் சார்பில் மாளிகாவில அஜஷ்ஜி தேரரின் பங்களிப்போடும் இந்த 32 பேரும் மீட்கப்பட்டுள்ளனர்.
தாய்லாந்தில் சிக்கித் தவிக்கும் இலங்கையர்கள் பற்றி கடந்த வாரம், வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் மியான்மர் மற்றும் தாய்லாந்து அரசாங்கங்களுக்கு அறிவித்ததுடன், மீட்பு நடவடிக்கைக்கு ஆதரவளிக்குமாறும் கோரியிருந்தார். அத்துடன் இலங்கை வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா பணியக அதிகாரிகள் குழு ஒன்றையும் அனுப்பி வைத்திருந்தார்.
துரிதமான செயற்பாட்டின் பின்னர் மீட்பப்பட்ட 32 பேரும் இன்று தாய்லாந்தின் மேசொட் எல்லையூடாகத் தாய்லாந்தை வந்தடைந்தனர். மீட்கப்பட்டவர்கள் தாய்லாந்தில் உள்ள இலங்கைத் தூதுவரால் வரவேற்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் தக் மாகாணத்தில் உள்ள நலன்புரி நிலையமொன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் அனைவரையும் சர்வதேச புலம்பெயர்வு அமைப்பின் உதவியுடன் இலங்கைக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
2024 ஏப்ரல் மற்றும் ஆகஸ்ட் மாதங்களிலும் மியான்மர் மற்றும் தாய்லாந்து அரசாங்கங்களின் ஒருங்கிணைப்புடன் 28 இலங்கையர்கள் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
மனித கடத்தல் திட்டங்களுக்கு பலியாகாமல் இருக்க, வெளிநாட்டு வேலை தேடும் இலங்கையர்கள், அங்கீகரிக்கப்பட்ட நடைமுறைகளைக் கட்டாயமாகக் கடைபிடிக்க வேண்டும் என வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு வலியுறுத்தியுள்ளது.