யாழ். மாநகரின் அடுத்த முதல்வர் யார்? தமிழரசுக் கட்சிக்குள் குடுமிப் பிடி!

இலங்கைத் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் மாநகர முதல்வர் வேட்பாளராக யாரை தெரிவு செய்வது என்பதில் தமிழரசு கட்சிக்குள் வேறுபட்ட கருத்து நிலவியதால் முதல்வர் தெரிவு குறித்துத் தீர்மானிப்பதற்கான கூட்டம் இணக்கமின்றி முடிவடைந்தது. நாளை புதன்கிழமை காலை 9 மணிக்கு மீண்டும் கூட்டத்தைக் கூட்டி முதல்வர் தொடர்பாக தீர்மானம் எடுக்க முடிவு எடுக்கப்படவுள்ளது.

யாழ் மாநகர முதல்வரை தெரிவு செய்வதற்கான தெரிவு ஜனவரி 19 ஆம் திகதி வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் செ.பிரணவநாதன் தலைமையில் இடம்பெறவுள்ளது.

இலங்கைத் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் மாநகர முதல்வர் வேட்பாளராக யாரை தெரிவு செய்வது என்பதில் தமிழரசு கட்சிக்குள் வேறுபட்ட கருத்து நிலவியதால் யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியில் அமைந்துள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமை செயலகத்தில் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில இன்று  மாலை கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்,இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் சி.வி.கே.சிவஞானம், மற்றும் தமிழரசு கட்சியின் யாழ் மாநகர சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

இதன்போது யாழ் மாநகர முதல்வர் வேட்பாளரை தெரிவு செய்வதில் தமிழரசு கட்சிக்குள் வேறுபட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. முன்னாள் மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆனோலட் மற்றும் சொலமன் சிறில் ஆகியோரின் பெயர்கள் முதல்வர் தெரிவுக்கு முன்வைக்கப்பட்டன. இவர்கள் இருவரிலும் ஒருவரை முன்மொழிவது தொடர்பில் முடிவேதும் எட்டப்படாத காரணத்தினால் கூட்டம் இணக்கமின்றி முடிந்ததுடன், நாளை காலை 9:30 மணிக்கு முடிவெடுப்பதற்காக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!