தமிழ் மக்களினுடைய வழிபாட்டு உரிமைக்கு விடுக்கப்பட்ட சவால்களுக்கு தீர்வு வேண்டும்…! பௌத்த வாலிபர் சங்கத்திடம் சைவ மகா சபை வேண்டுகோள்…!

வெடுக்குநாறிமலை ஆதி சிவன் ஆலயம், குருந்தூர் மலை ஆதிசிவன் ஆலயம் போன்ற இடங்களில் தமிழ் மக்களினுடைய வழிபாட்டு உரிமைக்கு விடுக்கப்பட்ட சவால்களுக்கு தீர்வு காணப்படவேண்டும் என சைவ மகா சபையின் பொதுச் செயலாளர் பரா.நந்தகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொழும்பு பௌத்த வாலிபர்  சங்கத்தினர் நேற்றையதினம் யாழிற்கு விஜயம் மேற்கொண்டதுடன், நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் இன, மத ரீதியான பிரச்சினைகள் தொடர்பாக நேற்று மாலை யாழ்ப்பாணம் வணிகர் கழகத்தில் விசேட சந்திப்பொன்றையும் மேற்கொண்டனர்.

குறித்த சந்திப்பில் சமய தலைவர்கள்,யாழ்ப்பாணம் வணிகர் கழகத்தினர், சிவில் சமுகத்தினர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே  பரா.நந்தகுமார்  குறித்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

எங்களுடைய மக்களினுடைய பிரதான கோரிக்கைகளை இன்றைய காலகட்டத்திலே நாங்கள் எதிர்நோக்குகின்ற சவால்களை நாங்கள் பௌத்த வாலிபர்  சங்கத்தின் தலைவர் மகேந்திர ஜெயசேகரவின் கவனத்திற்கு கொண்டு வந்திருக்கின்றோம்.

அவர்களும் கரிசனையோடு அதனை செவிமடுத்திருக்கிறார்கள்.

குறிப்பாக மத ரீதியாக , இன ரீதியாக அண்மையிலே வழிபாட்டு உரிமைக்கு இடப்பட்டிருக்கின்ற சவால்களை வெடுக்குநாறிமலை ஆதி சிவன் ஆலயம், குருந்தூர் மலை ஆதிசிவன் ஆலயம் போன்ற இடங்களிலே நடைபெற்று இருக்க கூடிய தமிழ் மக்களை பாதித்திருக்க கூடிய, தமிழ் மக்களினுடைய வழிபாட்டு உரிமைக்கு விடுக்க கூடிய சவால்களை அவருடைய கவனத்துக்கு கொண்டு வந்திருக்கின்றோம்.

அவர் அதை தென்னிலங்கைக்கு கொண்டு செல்வதாகவும் அழுத்தத்தை பிரயோகிப்பதாகவும் தெரிவித்திருக்கின்றார்கள். அதேவேளை, நாங்கள் இதை  ஆதரிக்கவில்லை என்பதையும் வெளிப்படுத்தியிருந்தார்கள்.

இதனுடைய நீண்ட கால பிரச்சினைக்கு அதிகார பகிர்வு கிடைக்க வேண்டும். எங்களுடைய நாட்டிலே இந்த இரண்டு இனங்களுக்கு இடையிலே ஏற்பட்டிருக்கின்ற முறுகல் பொருளாதார நெருக்கடியை தோற்றுவித்து முழு இலங்கையும் பாதிக்கப்பட்டிருக்கின்ற இந்த நிலைமையிலே, உரிமைகளை சமனாக பகிர்ந்து நிற்க வேண்டும் என்பதனை மிக ஆணித்தரமாக அவர்களுக்கு வலியுறுத்தி நிற்கின்றோம்.

அதே போல மயிலத்தமடு, மாதவனை பிரதேசத்தில் வாயில்லா ஜீவன்களை வைத்திருக்கின்ற பண்ணையாளர்கள் பாதிக்கப்படுகின்றதையும் கூறியிருக்கின்றோம்.

அதாவது, இப்போது எரிபற்று நிலையிலே இருக்கின்ற இந்த பிரச்சினைகள் அடிப்படை பிரச்சினைகள் ஆகும்.

 

அதனை தீர்ப்பதால்  இங்கு இருக்கின்ற அனைத்து இன,மத மக்களும் மிகவும் சிறப்பாக நல்லுறவோடு வாழக்கூடியதாக இருக்கும்.

குறிப்பாக இனி வருகின்ற காலங்களிலே இவ்வாறான அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருப்பதற்கு எவ்வளவு உச்சபட்ச அழுத்தத்தை அரசாங்கத்துக்கும் அவர்கள் கொடுக்க வேண்டும் என்பது தொடர்பில் நாங்கள் தொடர்ச்சியாக சந்திப்பு, மற்றும் பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டும்.

குறிப்பாக இளைஞர்கள் இந்த நாட்டை விட்டு வெளியேறிக்கொண்டிருக்கிறார்கள். இந்த நாட்டின் இருப்பு கேள்விக்குறியாக இருக்கின்ற இந்த காலகட்டத்தில், அந்த இருப்பை தக்க வைப்பதற்கும் தொடர்ச்சியாக நிம்மதியாக ஒரு அபிவிருத்தியான பாதையிலே நகர்வதற்கும் எங்களுடைய அடிப்படை பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!