ஈழத் தமிழருக்கு இலங்கையில் மட்டுமல்ல இந்தியாவில் கூட பாதுகாப்பு இல்லை என்பதனை சாந்தனின் மறைவு எடுத்துக்காட்டுவதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் தெரிவித்துள்ளது.
அந்த சங்கம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இந்திய வல்லாதிக்கத்தால் பலியெடுக்கப்பட்ட இன்னொரு ஈழத்தமிழனுக்கு எமது இறுதி வணக்கங்கள்
தியாக தீபம் திலீபன், தளபதி கிட்டு போன்ற வீரமறவர்கள் இந்திய அரசின் சதியினால் வீரச்சாவைத் தழுவிக்கொண்டது போலவே தமிழ் மண்ணை நேசித்த தமிழ் உணர்வாளன் சாந்தன் என்கின்ற தில்லையம்பலம் -சுதேந்திரராஜா என்பவரும் இந்திய அரசின் சதி வேலை காரணமாக உயிரிழந்துள்ளார்.
இப்படியான நிகழ்வுகள் ஈழத் தமிழருக்கு இலங்கையில் மட்டுமல்ல இந்தியாவில் கூட பாதுகாப்பு இல்லை என்பதை வெளிகாட்டுகின்றது.
மகாத்மா காந்தி பிறந்த இந்திய தேசத்தின் அரசு நயவஞ்சகத்துடன் இரட்டை வேடம் போட்டு இவரைக் கொன்றிருக்கிறது.
தான் சம்பந்தப்படாத குற்றத்திக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டு, பின் 33 வருடங்களாக சிறையில் வாடிய பின், உச்சநீதி மன்றம் விடுதலை செய்த பின்னரும் உயிருடன் சொந்த மண்ணிற்கு அனுப்பாமல் இரக்கமற்ற ஈனச்செயல் புரிந்த இந்திய அரசிற்கு,
இலங்கை அரசின் துரோகத்தனத்தால் எம் உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டு இன்றும் நீதியற்று கண்ணீருடன் வாழும் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளாகிய நாங்கள் வன்மையான கண்டனத்தை தெரிவிக்கின்றோம்.
தாய் மண்ணையும், தாயாரையும் காணும் ஏகத்துடனேயே இவ்வுலகை விட்டு பிரிந்த சாந்தனுக்கு எமது கண்ணீர் அஞ்சலியினை செலுத்துவதுடன் அன்னாரின் தயாரின் துயரிலும் அவரது குடும்ப உறவுகளின் துயரிலும் தாய்மார்களாகிய நாங்களும் பங்கு கொள்கின்றோம்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கின்றோம். – என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.