யாழில் நாளை முதல் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டம் ஆரம்பம்!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நாளை முதல் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார  பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இன்றையதினம்(17)  யாழ்ப்பாணத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாளைய தினம் முதல் விசேட டெங்கு ஒழிப்பு வேலை திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இதன்போது  மாவட்டத்திலுள்ள அனைத்து பொது சுகாதார பரிசோதகர்களும் இந்த வேலை திட்டத்தில் ஈடுபடுத்தப்படவுள்ளார்கள்.

குறிப்பாக திருநெல்வேலி,  கொக்குவில், யாழ் நகரை அண்டிய பகுதிகளில் அதிகளவானோர்  கடந்த இரண்டரை மாதங்களுக்குள் தொற்றுக்குள்ளாகி இருக்கின்றார்கள்.

ஆகவே, இது ஒரு முக்கியமான பிரச்சினையாக காணப்படுகின்றது.

கடந்த டிசம்பர் மாதத்தில் மாத்திரம் 2800 பேருக்கு மேற்பட்டவர்கள் யாழ் மாவட்டத்தில் டெங்கு நோயின் தாக்கத்திற்கு உள்ளாகி இருக்கின்றார்கள்.

இது ஒரு பாரிய பிரச்சினை பொதுமக்கள் இது தொடர்பில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.

சுகாதாரத் திணைக்களம் மற்றும் அதனோடு இணைந்த திணைக்களங்கள் அனுசரணையாக இருக்க முடியும் . ஆனால் பொதுமக்கள் தங்களுடைய வீட்டுப் பகுதி  சுற்று பகுதிகளில் டெங்கு நோய் பரவும் அபாயத்தை இல்லாது ஒழிக்க வேண்டும். ஏனெனில் இந்த அபாயம் ஏற்பட்டால் சில சமயங்களில் இழப்பு ஏற்படலாம்.

இப்போது யாழ்ப்பாண மாவட்டத்தில் தினசரி நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு பல்வேறு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுகின்றார்கள் இது ஒரு முக்கிய பிரச்சனை,

நாளை காலை 8.30 மணி முதல் கொக்குவில் கிழக்கு பகுதியில் 20 குழுக்களாக இந்த பணியை ஆரம்பிக்க இருக்கின்றோம்.

இந்த வேலைத் திட்டத்தில் அந்தந்த கிராமங்களில் இருக்கின்ற பொதுமக்கள் சார் அமைப்புகள் இணைந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!