சிறுவர் வன்முறைக்குப் பெற்றோரின் அக்கறை இன்மையும் ஒரு காரணம் என்கிறார் யாழ். மாவட்டப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் !

பெற்றோரின் முறையான கண்காணிப்பு இல்லாத காரணத்தாலும், சிறுவர்கள் மீதான அக்கறையின்மையினாலுமே 80 வீதமான சிறுவர்கள் மீதான வன்முறைகள் இடம்பெற்றுள்ளன என்று யாழ்ப்பாண மாவட்டப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் மஞ்சுள செனரத் தெரிவித்தார்.

சங்கானையில் சிறுவர் துஸ்பிரயோகத்தை தடுத்தல் என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு உரையாற்றும் போது, “சிறுவர்களுக்கு எதிரான வன்முறை என்பது உடல், உள மற்றும் பாலியல் துன்புறுத்தல்கள் என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். இது எல்லா நாடுகளிலும் – எல்லாச் சமூகங்களிலும், எல்லா மட்டங்களிலும் நடக்கிறது. பாதுகாப்பாக உணரும் தருணம் வரை சிறுவர்கள் இது பற்றிப் பெரியவர்களிடம் சொல்வதில்லை.

சிறுவர்களுக்கெதிரான வன்முறைகளை எந்தச்
சந்தர்ப்பத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. நாங்கள் வன்முறைகளில் இருந்து அவர்களைக் காப்பற்ற முடியும்.

யாழ்ப்பாணத்தில் சிறுவர்களுக்கெதிரான வன்முறைகள் அதிகமாகவே உள்ளன. இவ்வாறான சம்பவங்களை நாங்கள் தனித்தனியாக மதிப்பீடு செய்த போது, அவற்றில் 80 வீதமானவை பெற்றோரின் முறையான கண்காணிப்பு இல்லாத காரணத்தாலும், சிறுவர்கள் மீதான அக்கறையின்மையினாலுமே இடம்பெற்றுள்ளன.

இவற்றைத் தடுப்பதில் நாம் அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும். சட்டத்தை உருவாக்குபவர்கள், அரசாங்க அதிகாரிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் சமூகத்தின் அனைத்துத் தரப்பினருக்கும் பங்குண்டு. அத்துடன் ஊடகங்களுக்கும் பெரும் பங்கு உண்டு. எனவே நாம் அனைவரும் ஒன்றாகி ஒளியேற்ற முன்வர வேண்டும்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!