குமுதினிப் படுகொலையின் 38 ஆவது நினைவேந்தல் நெடுந்தீவில்!

குமுதினி படகுப் படுகொலையின் 38ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு இன்று திங்கட்கிழமை நெடுந்தீவில் இடம்பெற்றது.

1985ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் திகதி நெடுந்தீவுத் துறைமுகத்திலிருந்து 64 பயணிகளுடன் குமுதினிப் படகு பயணித்துக் கொண்டிருந்த வேளை இலங்கை கடற்படையினரால் நடுக்கடலில் வழிமறிக்கப்பட்டு குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் உட்பட 36 பேர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டிருந்தனர். இவர்களின் நினைவாக இன்று காலை 9.00 மணிக்கு நெடுந்தீவு இறங்குதுறையிலுள்ள நினைவாலய வளாகத்தில் இந்த நினைவேந்தல் நிகழ்வு இடபெற்றது.

மாவிலி துறைமுகத்தில் அமைந்துள்ள வீரபத்திர பிள்ளையார் ஆலயத்தில் ஆத்மா சாந்தி வேண்டி சிறப்புப் பூஜையும், புனித சவேரியார் ஆலயத்தில் ஆத்ம சாந்தித் திருப்பலியும் சம நேரத்தில் இடம் பெற்றன. அதனைத் தொடர்ந்து காலை 9 மணிக்கு குமுதினி படுகொலை நினைவேந்தல் குழுமத்தின் நெடுந்தீவு பிரதேச தலைவர் வி.ருத்திரன் தலைமையில் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பமாகின.

நினைவுத் தூபிக்கான நினைவுச் சுடர் ஏற்றல் மற்றும் மலர் அஞ்சலி செலுத்துதல் ஆகிய நிகழ்வுகளுடன் பசுந்தீவு
ருத்திரனின் குருதியின் குமுறல்கள் என்ற கவிதை நூலும் வெளியிட்டு வைக்கப்பட்டது. நிகழ்வில் முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சியும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் நெடுந்தீவைச் சேர்ந்த மதத் தலைவர்கள், உயிரிழந்தவர்களின் உறவினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!