இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இந்த உத்தியோக பூர்வ அறிவித்தல் சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ளது.
நேற்று – செப்ரெம்பர் 21 ஆம் திகதி இடம்பெற்ற தேர்தலில் மக் வாக்குகளைப் பெற்று அனுரகுமார திசாநாயக்க முன்னிலை வகித்த போதிலும், ஜனாதிபதித் தேர்தல் விதிமுறைகளுக்கமைவாக 50 வீதத்துக்கு மேற்பட்ட வாக்கு எண்ணிக்கையைப் பெற்றுக்கொள்ளாததன் காரணமாக, இரண்டாவது சுற்றில் விருப்பு வாக்குகளை எண்ணும் தேவை ஏற்பட்டது. இன்று மதியமளவில் விருப்பு வாக்குகள் எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. விருப்பு வாக்கு எண்ணும் பணிகள் சற்று முன்னர் நிறைவடைந்த நிலையில், 57 இலட்சத்து 40 ஆயிரத்து 179 வாக்குகளைப் பெற்று தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள அனுரகுமார திசாநாயக்க நாளை திங்கட்கிழமை முற்பகல் 9:00 மணியளவில் ஜனாதிபதி மாளிகையில் எளிமையான முறையில் பதவியேற்கவுள்ளார் என்று தேசிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.